கொரோனா தொற்று; தொழில் நுட்ப உதவி, மக்கள் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்தினோம்: சீனா


கொரோனா தொற்று; தொழில் நுட்ப உதவி, மக்கள் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்தினோம்:  சீனா
x
தினத்தந்தி 28 March 2020 11:19 AM GMT (Updated: 28 March 2020 11:19 AM GMT)

கொரோனா வைரஸ் தொற்று நோயை தொடர்ந்து பரவாமல் தொழில் நுட்ப உதவி மற்றும் மக்கள் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்தினோம் என சீனா கூறியுள்ளது.

பெய்ஜிங்,

சீனாவில் கடந்த டிசம்பர் இறுதியில் உகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.  விலங்கு உணவகம் ஒன்றில் இருந்து இந்த வைரஸ்  பரவியது என முதலில் கூறப்பட்டது.  இதனை தொடர்ந்து பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய நகரங்களுக்கும் வைரஸ் பரவியது என முதலில் கூறப்பட்டது.  ஆனால், உகான் நகரிலேயே அதிக அளவில் பாதிப்பு உள்ளது என தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகின.

ஏறக்குறைய 140 கோடிக்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி கொண்டது.  தொடர்ந்து சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கும் வைரஸ் பரவியது.  இதுவரை உலக அளவில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்புக்கு பலியாகி உள்ளனர்.  பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தியா உதவி

சீனாவுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் மருத்துவ உதவிகளை செய்ய முன்வந்தன.  அதனை ஏற்ற சீனாவுக்கு, விமானங்கள் வழியே பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டன.

அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, தன் நாட்டு மக்களை ஒருங்கிணைத்து வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது அனைவரையும் கவனிக்க செய்துள்ளது.

இது எப்படி சாத்தியப்பட்டது?  இதுபற்றி ஷாங்காய் நகரை சேர்ந்த மருத்துவர்கள் விவரமான குறிப்புகளை பதிவு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கண்டறிய, மக்கள் திரள் கண்காணிப்பையும், பெருமளவிலான தரவுகளை சேகரிக்க நவீன தொழில்நுட்பங்களையும் சீனா பயன்படுத்தியுள்ளது.  இதன்படி, ஒருவர் குடியிருப்புக்குள் நுழையும் முன், நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள ஃபேஸ் ஸ்கேனருக்கு எதிரே முகத்தை பதிவு செய்துள்ளனர்.

சி.சி.டி.வி. கேமராக்கள்

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள 20 கோடி சி.சி.டி.வி. கேமராக்களை கொண்டு, முகம் அறியும் செயலியை கொண்டும், மக்கள் திரள் கண்காணிப்பையும், பெருமளவிலான தரவுகளையும் சேகரித்துள்ளனர்.

சாலையை கடக்கும் போதும், வாகனங்களை ஓட்டும் போதும், தெருவோரம் நடமாடும் போதும் சி.சி.டி.வி.யில் பதிவாகும் முகத்தை கொண்டு அவர் யார், எந்த மாகாணத்தை சேர்ந்தவர் என்ற விவரத்தை அறிந்து கொண்டனர்.

மக்கள் திரள் கண்காணிபபு

அதனுடன், 'வாட்ஸ்அப்' போன்ற  'வீசேட்' செயலியை பயன்படுத்தி அதிலுள்ள உரையாடல்களை கொண்டு பெருமளவிலான தரவுகளை சேகரித்து மக்கள் திரள் கண்காணிப்பை மேற்கொண்டனர்.  மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்று பதிவு செய்தவர்களை பற்றியும், ஏற்கெனவே சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல் தளத்திலிருந்து ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.

ஒரு நபர் கடந்த 14 நாட்களாக சுற்றி திரிந்த பகுதிகள், சந்தித்த நபர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நோய்த்தொற்று சுயதடைகாப்பு குறித்த பரிந்துரைகள் வழங்கப்பட்டன.  அவர் சந்தித்த நபர்களுக்கு இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களையும் நோய்த்தொற்று சுயதடைகாப்பில் இருக்க வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.

வரைபடம் இணைப்பு

கொரோனா நோய்த்தொற்றுள்ள நபர்களை மஞ்சள் நிறத்தை கொண்டும், நலமுடன் உள்ளவர்களை பச்சை நிறத்தை கொண்ட குறியீடுகளை கொண்டும் அறிந்து கொண்டனர்.  இந்த இரு நிறங்களை கொண்டு நாட்டின் வரைபடத்தை இணைத்துள்ளனர். எந்த பகுதியில் பாதிப்பு அதிகம் என்பதை ஒருவர் செல்போனை பயன்படுத்தி தெரிந்துகொள்ள முடியும்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு

பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, நோய்த்தொற்று உள்ளவர், அதிகபட்சம் வீட்டை தாண்டி நோய்த்தொற்று பரவாமல் இருக்க செய்ததாக கூறுகின்றனர்.  இந்த முறையில் தான் கொரோனா என்ற பெரும் தொற்றுநோயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக சீனாவில் உள்ள மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனினும், உலக நாடுகளை உறைய வைத்துள்ள இந்த வைரஸ் பரவலை, சீனா தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  அந்நாட்டில், சில குறிப்பிட்ட நகரங்களில் பயண தடைக்கான விதிகள் தளர்த்தப்பட்டு உள்ளன.  மக்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்ல தொடங்கி உள்ளனர்.  தோன்றிய இடத்தில் இருந்து வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மக்களை காக்கும் பணிக்காக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.  பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்பே இதற்குரிய பலனை தரும் என்பதில் சந்தேகமில்லை.

Next Story