கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தனிமையில் பிரார்த்தனை நடத்திய போப் ஆண்டவர்


கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தனிமையில் பிரார்த்தனை நடத்திய போப் ஆண்டவர்
x
தினத்தந்தி 29 March 2020 12:02 AM GMT (Updated: 29 March 2020 12:02 AM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில், வழக்கமாக நூற்றுக்கணக்கான மக்களுடன் இணைந்து பிரார்த்தனை நடத்தும் போப் ஆண்டவர் பிரான்சிஸ், நேற்று தனிமையில் பிரார்த்தனை நடத்தினார்.

வாடிகன் சிட்டி, 

ஐரோப்பிய நாடான இத்தாலி கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு இந்த கொடிய வைரசுக்கு 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியான நிலையில், கிட்டத்தட்ட 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற சுதந்திர நாடும், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமுமான வாடிகன் நகரிலும் கொரோனா பாதிப்பு உள்ளது.

எனவே வைரஸ் பரவாமல் தடுக்க இத்தாலி அரசு மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கைகளை வாடிகன் நகரமும் பின்பற்றி வருகிறது. அதன்படி அங்குள்ள அனைத்து தேவாலயங்களும் மூடப்பட்டு பிரார்த்தனை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வழக்கமாக நூற்றுக்கணக்கான மக்களுடன் இணைந்து பிரார்த்தனை நடத்தும் போப் ஆண்டவர் பிரான்சிஸ், நேற்று செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தனிமையில் பிரார்த்தனை நடத்தினார்.

83 வயதான போப் ஆண்டவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருக்கும் சூழலில் அவருக்கு விரைவில் நோய் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் பிரார்த்தனை கூட்டங்களை தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story