கொரோனா பீதியில் உலக நாடுகள்: வடகொரியா ஏவுகணை சோதனை


கொரோனா பீதியில் உலக நாடுகள்: வடகொரியா ஏவுகணை சோதனை
x
தினத்தந்தி 30 March 2020 12:06 AM GMT (Updated: 30 March 2020 12:06 AM GMT)

உலக நாடுகள் கொரோனா பீதியில் உறைந்திருக்கும் நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது.

சியோல், 

கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. நாள்தோறும் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஆனால் வடகொரியா எந்தவித பதற்றமும் இல்லாமல் தொடர்ந்து, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியாவின் அண்டை நாடான தென் கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.

அங்கு இந்த கொடிய வைரசுக்கு இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.

ஆனால் வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. வடகொரியா அரசும் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை.

இது சர்வதேச அளவில் பெரும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. எனினும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய உடனேயே தனது எல்லைகள் அனைத்தையும் வடகொரியா மூடுவதாக அறிவித்தது.

அதே சமயம் உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் எந்தவிதமான பதற்றமும் இன்றி ஏவுகணைகளை சோதித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக வடகொரியா நேற்று 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென் கொரிய ராணுவ படைப்பிரிவின் துணைத் தலைவர் கூறுகையில், “வடகொரியாவின் வோன்சான் கடற்கரையில் இருந்து, குறுகிய தொலைவு சென்று தாக்கும் 2 ஏவுகணைகள் ஏவப்பட்டன. இந்த ஏவுகணைகள் 230 கி.மீ தொலைவுக்கு 30 கி.மீ உயரத்தில் சென்றது. உலக நாடுகள், கொரோனா வைரசால் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் சூழலில், வடகொரியாவின் இந்த நடவடிக்கை முற்றிலும் பொருத்தமற்றதாக உள்ளது” என கூறினார்.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், “வடகொரியா குறுகிய தொலைவு சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணைகளை இன்று பரிசோதனை செய்தது. ஆனால், அந்த ஏவுகணை ஜப்பான் எல்லைக்குள் வரவில்லை. இந்த மாதத்தில் தொடக்கத்தில் இருந்து வடகொரியா பரிசோதனை செய்யும் 9-வது ஏவுகணை இதுவாகும். வடகொரிய அரசு தொடர்ந்து ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவை அனைத்தையும் கிம் ஜான் அன்னின் மேற்பார்வையிலேயே நடந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story