கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் ஆறு வார கைக்குழந்தை உயிரிழப்பு


கொரோனா பாதிப்பால்  அமெரிக்காவில்  ஆறு வார கைக்குழந்தை உயிரிழப்பு
x
தினத்தந்தி 2 April 2020 5:26 AM GMT (Updated: 2 April 2020 5:26 AM GMT)

கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் ஆறு வார கைக்குழந்தை உயிரிழந்துள்ளது.

நியூயார்க் 

கொரோனா வைரஸ் அமெரிக்காவில் வேகமாகப் பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா அதிகம் பரவியுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது.  அந்நாட்டில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளது.  கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சுமார் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் சூழலில், அங்குள்ள  கனக்டிகட் மாகாணத்தில் பிறந்து 6 வாரங்களே ஆன கைக்குழந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. குழந்தைகளை கொரோனா பாதிக்கப்படுவது குறைவு என்ற கூற்றுப் பரவலாக இருந்த நிலையில், அதைப் பொய்யாக்கும் வகையில், அமெரிக்காவில் முதல் சம்பவம் நடந்துள்ளது. 

 கனக்டிகட் மாகாணத்தில் உள்ள  ஹார்ட்போட் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 6 வாரங்களே நிரம்பிய குழந்தை இருந்தது. அந்த குழந்தை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அசைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட அந்தக் குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழந்தது.  உடற்கூறாய்வு சோதனையில் அக்குழந்தைக்கு கொரோனோ தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. 

இந்த தகவலை வெளியிட்ட கனெக்டிகட் மாகாண ஆளுநர், “ கனெக்டிகட்  மாகாணத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த குறைந்த வயது கொண்டதாக இந்த குழந்தைதான் இருக்கக் கூடும். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதை நமக்கு இந்தக் குழந்தையின் உயிரிழப்பு நினைவூட்டுகிறது” என்றார். 

Next Story