ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை: “அமெரிக்க படைகளை தாக்கினால் பேரழிவை சந்திக்க நேரிடும்”


ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை: “அமெரிக்க படைகளை தாக்கினால் பேரழிவை சந்திக்க நேரிடும்”
x
தினத்தந்தி 2 April 2020 11:35 PM GMT (Updated: 2 April 2020 11:35 PM GMT)

அமெரிக்க படைகளை தாக்கினால் ஈரான் பேரழிவை சந்திக்க நேரிடும் என ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

வாஷிங்டன், 

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது முதல் இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இதன் காரணமாக ஈராக் நாட்டுக்கு ஆதரவாக அங்குள்ள பயங்கரவாத குழுக்கள், அமெரிக்க படைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தன. இதற்கு பதிலடி தரும் விதமாக பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்கா-ஈரான் இடையே மேலும் மோதல் வலுத்தது. ராணுவ தளபதியின் கொலைக்கு பதிலடியாக ஈராக்கில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் படுகாயம் அடைந்தனர். கடந்த வாரம் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்களும், இங்கிலாந்து வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க வீரர்கள் அல்லது அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அந்த நாடு மிகப்பெரிய பேரழிவை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறினார். எனினும் இது குறித்த கூடுதல் தகவல் களை அவர் வழங்கவில்லை.

இது குறித்து அவர் கூறுகையில், “ஈரானின் தாக்குதல் திட்டம் குறித்து நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் அப்படி நடந்து கொண்டால் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். இதுவரை சந்திக் காத பேரழிவை சந்திக்க நேரிடும்” என கூறினார்.

அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் நிலையில், ஜனாதிபதி டிரம்ப் அதனை கட்டுப் படுத்துவதில் கவனம் செலுத்துவதைவிட்டு ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதற்கு ஜனநாயக கட்சியினர் உள்பட பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Next Story