அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது - 1½ மாத கைக்குழந்தை உயிரிழந்த பரிதாபம்


அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது - 1½ மாத கைக்குழந்தை உயிரிழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 3 April 2020 12:15 AM GMT (Updated: 2 April 2020 11:54 PM GMT)

அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது. இந்த நோய் தாக்கி பிறந்து 6 வாரங்களே ஆன கைக்குழந்தை பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாஸ்கோ, 

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. 6 வார கால கைக்குழந்தை உயிரிழந்தது. சீனா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளை கலங்கடித்த கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது.

அங்கு பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி விட்டது. 2 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதிக அளவாக, நியூயார்க் மாகாணத்தில் பலி எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கி விட்டது.

இதற்கிடையே, அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், பிறந்து 6 வாரங்களே ஆன கைக்குழந்தை பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹார்ட்போர்டு பகுதியை சேர்ந்த அந்த பெண் குழந்தை, உணர்விழந்த நிலையில் கடந்த வாரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.

அதை உயிர் பிழைக்க வைக்க நடந்த முயற்சி தோல்வி அடைந்து, குழந்தை உயிரிழந்தது. அதன்பிறகுதான், குழந்தை யின் ரத்த மாதிரி முடிவுகள் வெளிவந்தன. அதில், குழந்தைக்கு கொரோனா இருந்தது உறுதியானது.

இந்த தகவலை கனெக்டிகட் மாகாண கவர்னர் நெட் லேமோண்ட் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், “அந்த குழந்தை இறந்தது இதயத்தை நொறுக்குவதாக அமைந்து விட்டது. கொரோனாவிடம் இருந்து யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை நிரூபித்து விட்டது. கனெக்டிகட் மாகாணத்தில் கொரோனாவுக்கு பலியான மிக இளவயது நபர், அந்த குழந்தைதான்.

அதன் பெற்றோருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் வீட்டுக்குள் இருக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

இதுபோல், ஹார்ட்போர்டு நகர மேயர் லுக் பிரோனினும் இரங்கல் தெரிவித்துள்ளார். கனெக்டிகட் மாகாணத்தில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 85 பேர் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே, கனெக்டிகட் மாகாணத்தில், வருகிற 15-ந் தேதிவாக்கில் கொரோனா வைரஸ் உச்சத்தை தொடும் என்றும், ஆஸ்பத்திரி படுக்கைகளுக்கு பற்றாக்குறை நிலவும் என்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகம் தயாரித்த கணிப்பு தெரிவித்துள்ளது. 1,100 பேர் பலியாக வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

மே மாதத்தில் நோயாளிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கும் என்றும், ஜூன் மாதம் தொடங்கும்போது, யாருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்படாது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Next Story