‘கொரோனாவுக்கு எதிரான போரில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள்’ - இங்கிலாந்து மக்களுக்கு ராணி அழைப்பு


‘கொரோனாவுக்கு எதிரான போரில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள்’ - இங்கிலாந்து மக்களுக்கு ராணி அழைப்பு
x
தினத்தந்தி 5 April 2020 11:58 PM GMT (Updated: 5 April 2020 11:58 PM GMT)

கொரோனவுக்கு எதிரான போரில் சுய ஒழுக் கத்தை கடைப்பிடிக்க வேண்டுமென இங்கிலாந்து மக்களுக்கு ராணி 2-ம் எலிசபெத் அழைப்பு விடுத்துள்ளார்.

லண்டன், 

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 4,500-ஐ எட்டியுள்ளது.

இந்த கொடிய வைரஸ் அந்த நாட்டின் இளவரசர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜான்சான் ஆகியோரையும் விட்டுவைக்கவில்லை. இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதில் இளவரசர் சார்லஸ் கொரோனா வைரசில் இருந்து குணமடைந்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டார். பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்(வயது 93) மற்றும் அவரது கணவரான இளவரசர் பிலிப்(98) ஆகிய இருவரும் நார்போல்க் நகரில் உள்ள சாண்ட்ரிங்காம் எஸ்டேட்டில் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக ராணி 2-ம் எலிசபெத் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். வீடியோவாக பதிவு செய்யப்பட்ட அவரது உரை, தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. தனது உரையில் ராணி பேசியதாவது:-

தற்போது நாம் நாட்டுக்கு ஒரு துயரமான மற்றும் சவாலான நேரமிது என்பதை நான் அறிவேன். இந்த பெரும் சவாலை நமது மக்கள் எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதை எண்ணி எல்லோரும் பெருமிதம் கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்.

இந்த தலைமுறையின் இங்கிலாந்து மக்கள் எதனையும் சமாளிக்கும் வலிமை உடையவர்கள் என்று நமது பின் சந்ததியினர் கூறும் வகையில் சிறப்பாக நடந்து கொள்ள வேண்டும்.

சுய ஒழுக்கம், நற்பண்புகள், அமைதியான நல்ல எண்ணம், சமூகத்தினரின் பண்புகள் ஆகியவை நம் நாட்டை மேலும் வலுப்படுத்துகின்றன. எனவே கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டு மக்கள் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

நம் நாட்டில் துயரமான தருணம். சிலருக்கு வருத்தம், பலருக்கு நிதி சிக்கல்கள், நம் அனைவரின் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள், இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

எனினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு கொரோனாவை வெல்வோம். இந்த நேரத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களை நான் பாராட்டுகிறேன். இவ்வாறு ராணி 2-ம் எலிசபெத் பேசினார்.

Next Story