ஆப்கானிஸ்தானில் குருத்துவாரா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி கைது


ஆப்கானிஸ்தானில் குருத்துவாரா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி கைது
x
தினத்தந்தி 6 April 2020 12:04 AM GMT (Updated: 6 April 2020 12:04 AM GMT)

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டு தலமான குருத்துவாராவுக்குள் கடந்த மாதம் 25-ந்தேதி பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

காபூல், 

இதில் இந்தியர் ஒருவர் உள்பட 27 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

அதனை தொடர்ந்து, இந்த தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளில் ஒருவர் இந்தியர் என்றும், அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதனிடையே இந்த தாக்குதலில் மேலும் சில பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் பயங்கரவாத தடுப்பு போலீசார் நாடு முழுவதும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில், குருத்துவாரா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அஸ்லாம் பாரூகி என்ற ஐ.எஸ். பயங்கரவாத தலைவரை பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது செய்தனர்.

அவருடன் அவரது கூட்டாளிகளான 19 பேரும் கைது செய்யப்பட்டனர். அஸ்லாம் பாரூகி பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story