அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் - ஜப்பானில் அவசர நிலையை அறிவிக்க முடிவு


அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் - ஜப்பானில் அவசர நிலையை அறிவிக்க முடிவு
x
தினத்தந்தி 7 April 2020 12:13 AM GMT (Updated: 7 April 2020 12:13 AM GMT)

ஜப்பானில் கொரோனா வைரசின் அச்சுறுத்தல் அதிகமாகி இருக்கும் நிலையில், நாட்டில் அவசர நிலையை அறிவிக்க பிரதமர் ஷின்ஜோ அபே முடிவு செய்துள்ளார்.

டோக்கியோ, 

சீனாவில் உருவான உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் 190 நாடுகளுக்கும் மேல் பரவி உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கொடிய வைரசுக்கு தினம்தினம் ஆயிரக்கணக்கானோர் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். அதேபோல் உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

அதிலும் குறிப்பாக உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி நிலைகுலைந்து உள்ளது. வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்காவை தொடர்ந்து, ஜப்பானில் அவசர நிலையை பிரகடனப்படுத்த, அந்த நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜப்பானில் இதுவரை 3,600-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் தலைநகர் டோக்கியோவில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அதேபோல் ஜப்பானில் கொரோனா வைரசுக்கு இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் ஜப்பானில் கொரோனா வைரசின் பாதிப்பு குறைவு என்றபோதிலும், தற்போது அங்கு வைரஸ் பரவல் சற்று வேகமெடுக்க தொடங்கி இருக்கிறது.

குறிப்பாக தலைநகர் டோக்கியோ உள்பட முக்கியமான 5 பிராந்தியங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதை தடுக்க அரசு கடுமையான எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பிரதமர் ஷின்ஜோ அபே நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்த முடிவு செய்துள்ளார்.

மருத்துவ நிபுணர்களை கொண்ட ஆலோசனை குழுவின் பரிந்துரைக்காகவும், அவசர நிலையின் அளவீடுகளை வரையறை செய்வதற்காகவும் அவர் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) அவசர நிலை குறித்த முக்கிய அறிவிப்பை பிரதமர் ஷின்ஜோ வெளியிடுவார் என்று ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் நாடு முழுவதும் பரவலாக ஒரே விதமான கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என்றும், டோக்கியோ மற்றும் ஒசாகா போன்ற பெரிய நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story