கொரோனாவுக்கு லண்டன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெறும் போரிஸ் ஜான்சனுக்கு உதவ டிரம்ப் முன்வந்தார்


கொரோனாவுக்கு லண்டன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெறும் போரிஸ் ஜான்சனுக்கு உதவ டிரம்ப் முன்வந்தார்
x
தினத்தந்தி 8 April 2020 12:00 AM GMT (Updated: 7 April 2020 10:56 PM GMT)

கொரோனாவுக்கு லண்டன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெறும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு உதவுவதற்கு டிரம்ப் முன்வந்துள்ளார்.

வாஷிங்டன், 

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் (வயது 55) பாதித்தது. அவருக்கு கொரோனா வைரஸ் பாதித்தது, கடந்த 27-ந் தேதி மருத்துவ பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் லண்டனில் எண்.10, டவுனிங் வீதியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். அந்த நிலையிலேயே அவர் அரசு அலுவல்களை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் அவருக்கு தீவிரமாக வெளிப்பட்டன. அதைத் தொடர்ந்து அவர் டாக்டர்கள் ஆலோசனைப்படி, உடனடியாக லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் அவரது நிலைமை மோசம் அடைந்ததை தொடர்ந்து, திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் அதே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் மிகச்சிறப்பான சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

நேற்று முன்தினம் இரவுப்பொழுதை அவர் ஆஸ்பத்திரியில் கழித்தார். நேற்று காலையில் அவர், டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், இரவை நல்லவிதமாக கழித்ததாகவும், மந்திரிசபை மற்றும் அரசு ஆலோசகர்களிடம் இருந்து வருகிற தகவல்களை நல்ல உணர்வுடன் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு சிகிச்சையில் உதவுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்வந்துள்ளார். நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களை சந்தித்துப் பேசிய டிரம்ப் இது பற்றி கூறியதாவது:-

போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். அவர் குணம் அடைவதற்காக அமெரிக்கர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். இதில் தீர்வு காண்பதற்காக அமெரிக்காவின் முன்னணி மருந்து நிறுவனங்கள் லண்டனை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளேன்.

நாம் அவருக்கு உதவ முடியுமா என்று பார்ப்போம். போரிஸ் ஜான்சனுக்கு சிகிச்சை அளித்து வருகிற டாக்டர்களை நாங்கள் தொடர்பு கொண்டிருக்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

தீவிர சிகிச்சை பிரிவில் இந்த குறிப்பிட்ட வைரஸ் தொற்றுடன் வருகிறபோது, நிலைமை மோசமாகி விடுகிறது. போரிஸ் ஜான்சன் எனது நல்ல நண்பராக இருந்து வந்திருக்கிறார். அவர் உண்மையிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தவர்.

சிகிச்சையை பொறுத்தமட்டில் அமெரிக்கா மகத்தான முன்னேற்றம் கண்டுள்ளது. இதில் தீர்வுடன் என்னிடம் வந்த 2 அமெரிக்க நிறுவனங்களை உடனடியாக லண்டனுடன் தொடர்புகொள்ளும்படி கூறி உள்ளேன்.

அந்த நிறுவனங்கள் மிகப்பெரிய நிறுவனங்கள் ஆகும். அவர்களுக்கு லண்டனில் அலுவலகம் உள்ளது. அவை பெரிய நிறுவனங்கள் என்பதை விட, அவற்றின் அளவை விட, அவற்றை நடத்துகிறவர்கள் மேதைகள் ஆவர். அவர்களில் 4 பேரிடம் நான் பேசினேன். அவர்கள் பேசுகிற மொழியைக்கூட பெரும்பாலோனாரால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவர்களிடம் உள்ள ஒன்றை நான் புரிந்து கொள்கிறேன். உண்மையிலேயே அவர்களிடம் மேம்பட்ட சிகிச்சை இருக்கிறது. அவர்கள் ஏற்கனவே லண்டன் சென்று அடைந்து விட்டனர். அவர்களுக்கு தேவையான அனைத்தும் அவர்களது லண்டன் அலுவலகத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story