இன்று நடைபெற இருந்த ஆப்கானிஸ்தான் அரசுடனான அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து விலகல் - தலீபான்கள் அறிவிப்பு


இன்று நடைபெற இருந்த ஆப்கானிஸ்தான் அரசுடனான அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து விலகல் - தலீபான்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 April 2020 12:38 AM GMT (Updated: 8 April 2020 12:38 AM GMT)

ஆப்கானிஸ்தான் அரசுடன் இன்று நடைபெற இருந்த அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாக தலீபான் பயங்கரவாதிகள் அறிவித்தனர்.

காபூல், 

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தலீபான்களுக்கு எதிரான போரில் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. எனினும் இந்த உள்நாட்டுப் போரில் அப்பாவி மக்களே அதிகளவில் கொல்லப்படுவதால், போரை முடிவுக்கு கொண்டுவர ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க அரசுகள் முனைப்பு காட்டின.

அதன்படி கத்தார் தலைநகர் தோஹாவில் தலீபான் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க அரசு இடையே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. இதன் பலனாக இருதரப்புக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 29-ந்தேதி வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்கா மற்றும் தலீபான்கள் இடையே கையெழுத்தான இந்த முக்கிய ஒப்பந்தமானது ஆப்கானிஸ்தானின் நீண்டகால உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்குவகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலீபான்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் இந்த அமைதி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

ஆப்கானிஸ்தான் சிறையில் இருக்கும் தலீபான் கைதிகள் 5 ஆயிரம் பேரை அரசு விடுதலை செய்யும் என அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்கா உறுதியளித்திருந்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் அரசு ஒரே சமயத்தில் 5 ஆயிரம் தலீபான் கைதிகளை விடுவிக்க முடியாது என்றும், பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவாக விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் கூறியது.

ஆனால் தலீபான்கள் இதனை ஏற்க மறுக்கின்றனர். இதுவே இருதரப்புக்கும் உடன்பாடு ஏற்படுவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. இதனிடையே அமெரிக்காவின் அறிவுறுத்தலின் பேரில் தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்தது. இதற்கு தலீபான்களும் ஒப்புக்கொண்டனர்.

அதன்படி தலைநகர் காபூலில் ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலீபான் பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று (புதன்கிழமை) பேச்சுவார்த்தை தொடங்க இருந்தது.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் அரசுடனான பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாக தலீபான் பயங்கரவாதிகள் நேற்று திடீரென அறிவித்தனர். இது தொடர்பாக தலீபான் பயங்கரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தலீபான் கைதிகளை விடுவிப்பதாக அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை. ஏதேதோ சாக்குபோக்கு சொல்லி கைதிகளை விடுவிப்பதில் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. எனவே பலனற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை என நாங்கள் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் கைதிகள் விடுதலையில் தாமதம் ஏற்பட்டதற்கு தலீபான்களின் பிடிவாதமே காரணம் என ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “முதல் கட்டமாக 400 பயங்கரவாதிகளை விடுவிக்க அரசு தயாராக உள்ளது. ஆனால் மிகப்பெரிய தாக்குதல்களில் தொடர்புடைய போர்க்குணமிக்க தலீபான் தளபதிகள் 15 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அவர்களை விடுதலை செய்வது நாட்டில் வன்முறை தொடர வழிவகுக்கும்” என கூறினார்.

Next Story