கொரோனா வைரஸ் விவகாரத்தில் அதிருப்தி உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை நிறுத்துவோம் - அமெரிக்கா திடீர் மிரட்டல்


கொரோனா வைரஸ் விவகாரத்தில் அதிருப்தி உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை நிறுத்துவோம் - அமெரிக்கா திடீர் மிரட்டல்
x
தினத்தந்தி 8 April 2020 11:03 PM GMT (Updated: 8 April 2020 11:03 PM GMT)

கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள அதிருப்தியால் உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை நிறுத்தப் போவதாக அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.

வாஷிங்டன், 

கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி பரவத்தொடங்கியது முதல், உலக சுகாதார நிறுவனத்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு இணக்கமாக இல்லை. உலக சுகாதார நிறுவனம் மீது அமெரிக்கா கடும் அதிருப்தியில் உள்ளது.

சீனாவுக்கு முற்றிலும் சாதகமாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நேற்று முன்தினம் வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் இந்த விவகாரம் குறித்து பேசினார்.

அவர் கூறுகையில், “கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்துக்கு செலவழிக்கும் பணத்தை நிறுத்தப்போகிறோம்” என கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “நான் அதை நிறுத்தப் போகிறேன் என்று சொல்லவில்லை. நிதி அளிப்பதை நிறுத்தும் முடிவுக்கு வருவோம் என்றுதான் கூறுகிறேன்” என குறிப்பிட்டார். இந்த அமைப்புக்கு அதிக நிதி வழங்கி வருவது அமெரிக்காதான் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டுவிட்டரில் பதிவு வெளியிட்ட டிரம்ப், அதில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

அதில் அவர், “உலக சுகாதார நிறுவனம் ஒருதலைப்பட்சமாக சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவது தெரிகிறது. உலக சுகாதார நிறுவனம் எதற்காக தவறான பரிந்துரையை வழங்கியது ? (சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசை தடுப்பதற்காக சர்வதேச பயணங்களை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்ததை இப்படி குறிப்பிட்டார்.) அதிர்ஷ்டவமாக எங்கள் எல்லைகளை ஆரம்பத்தில் சீனாவுக்காக திறந்து வைக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறிய யோசனையை நிராகரித்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த டுவிட்டர் பதிவின் தொடர் நடவடிக்கையாகவே உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை நிறுத்தப்போவதாக டிரம்ப் மிரட்டி இருப்பதை சர்வதேச நோக்கர்கள் பார்க்கின்றனர். தவிரவும், இந்த மிரட்டல் சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

Next Story