மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி; இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி


File Photo
x
File Photo
தினத்தந்தி 9 April 2020 3:04 AM GMT (Updated: 9 April 2020 3:44 AM GMT)

இந்தியாவின் உதவியை மறக்க மாட்டேன் எனவும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுடன் அமெரிக்கா தத்தளித்து வருகிறது.
தற்போதைய  நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4.34 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்தியாவிடம் இருந்து அதிகளவிலான ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்கா எதிர்பார்க்கிறது. ஆனால், இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே மருந்து பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால், அமெரிக்கா  ஏற்கனவே தான் ஆர்டர் செய்திருந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. 
இதனால், கோபம் அடைந்த டிரம்ப்,  ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை  இந்தியா அனுப்பாவிட்டால், பதிலடி எடுக்கப்படும் என்று மிரட்டும் தொனியில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. 

எனினும், அமெரிக்கா போன்ற பல நாடுகளின் மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துப்பொருட்கள் ஏற்றுமதிக்கு விதித்த தடையை இந்தியா விலக்கிக்கொண்டது. இதையடுத்து, இந்தியப் பிரதமர் மோடியை  மிகப்பெரிய மனிதர் என்று என்று டிரம்ப் பாராட்டியிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகப் பதிவிட்டுள்ளார். டிரம்ப் கூறியிருப்பதாவது;- அசாதாரண நேரங்களில் நட்பு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு அவசியம். ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய அனுமதித்த இந்தியாவுக்கும் இந்தியமக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் மோடியின் வலுவான தலைமை இந்தியாவுக்கு மட்டும் இல்லாமல், மனிதத்திற்கும் உதவுகிறது” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story