ஏமனில் சண்டை நிறுத்தம் - சவுதி அரேபியா அறிவிப்பு


ஏமனில் சண்டை நிறுத்தம் - சவுதி அரேபியா அறிவிப்பு
x
தினத்தந்தி 9 April 2020 11:44 PM GMT (Updated: 9 April 2020 11:44 PM GMT)

ஏமனில் 2 வாரங்களுக்கு சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

ரியாத், 

ஏமனில் அந்த நாட்டு அரசுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் அங்கு களத்தில் உள்ளன. இந்த கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஏமன் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்துக்காக பிறநாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதனிடையே ஏற்கனவே உள்நாட்டு போரால் நிலைகுலைந்துள்ள ஏமனில் தற்போது உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இந்த இக்கட்டான சூழலில் கொரோனா வைரசுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடும் வகையில் உள்நாட்டு போரை உடனடியாக நிறுத்த வேண்டுமென ஏமன் மற்றும் சவுதி அரேபியா அரசுகளையும், ஹவுதி கிளர்ச்சியாளர்களையும் ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஏமனில் 2 வாரங்களுக்கு சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சண்டை நிறுத்தம் அரசியல் தீர்வுக்கும் வழிவகுக்கும் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் துறைமுக நகரமான மரீப்பில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். மேலும் இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

Next Story