உடல்நிலை தேறி வருவதால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து போரிஸ் ஜான்சன் வார்டுக்கு மாற்றம்


உடல்நிலை தேறி வருவதால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து போரிஸ் ஜான்சன் வார்டுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 10 April 2020 11:38 PM GMT (Updated: 10 April 2020 11:38 PM GMT)

கொரோனாவால் பாதிக்கப்பட்ட போரிஸ் ஜான்சன் உடல்நிலை தேறி வருவதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வார்டுக்கு மாற்றப்பட்டார்.

லண்டன், 

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர் கடந்த 5-ந் தேதி லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 6-ந் தேதி, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும், முன்னேறி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், உடல்நிலை தேறி வருவதை தொடர்ந்து, போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போரிஸ் ஜான்சன், குணமடைவதின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறார். நல்ல மனஉறுதியுடன் இருக்கிறார். அவர் தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பார்” என்று கூறப்பட்டுள்ளது.

போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி சைமண்ட்ஸ் கர்ப்பிணியாக இருக்கிறார். அவருக்கும், கொரோனா பாதித்துள்ளதால், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். தன் கணவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே வந்ததற்கு அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கைதட்டும் குறியீட்டை வெளியிட்டுள்ளார். மேலும், போரிஸ் ஜான்சனின் தந்தை ஸ்டான்லி ஜான்சன், டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தன் மகன் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

இங்கிலாந்தில் அமலில் உள்ள 21 நாள் ஊரடங்கு, 13-ந் தேதி முடிவடைகிறது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. நாளை ஈஸ்டர் பண்டிகை என்பதால், மக்கள் வெளியே சுற்ற வேண்டாம், வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்று பிரதமர் பொறுப்பை கவனிக்கும் வெளியுறவு மந்திரி டொமினிக் ராப் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதிப்பு எண்ணிக்கையை குறைப்பதுதான் தங்கள் நோக்கம் என்று அவர் கூறினார்.

Next Story