“அனைவரும் முக கவசம் அணியுங்கள்” - டிரம்புடன் முரண்படுகிறார் மனைவி மெலனியா


“அனைவரும் முக கவசம் அணியுங்கள்” - டிரம்புடன் முரண்படுகிறார் மனைவி மெலனியா
x
தினத்தந்தி 11 April 2020 11:07 PM GMT (Updated: 11 April 2020 11:07 PM GMT)

கொரோனா பாதித்தவர்கள் முக கவசம் அணிகிற விவகாரத்தில் கணவர் டிரம்புடன் மெலனியா டிரம்ப் முரண்படுகிறார். அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாஷிங்டன், 

வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ்தான் இப்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு 5 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் பாதித்து உள்ளது. நியூயார்க் நகரமும், மாகாணமும் சொல்லொணா துயரங்களை நாளும் அனுபவித்து வருகின்றன.

20 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்தாலும் கொரோனா வைரஸ், பரவுவது குறையவில்லை. ஆனால் முக கவசம் அணிவது அங்கு கட்டாயம் ஆக்கப்படவில்லை. முக கவசம் அணிய பரிந்துரைக்கிற ஜனாதிபதி டிரம்ப், உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. அவரே கூட முக கவசம் அணியவில்லை.

இதையொட்டி டிரம்ப் ஏற்கனவே கருத்து தெரிவித்தபோது, “எனக்கு முக கவசம் அணிய விருப்பம் இல்லை. வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் நான் எப்படி முக கவசம் அணிந்துகொண்டு இருக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை. முக கவசம் அணிந்து கொண்டு, நான் எப்படி பிற நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், சர்வாதிகாரிகள், மன்னர்கள், ராணிகளுடன் பேச முடியும்” என்று கூறி விட்டார். இன்று வரை அவர் முக கவசம் அணியவும் இல்லை.

மாறாக டிரம்பை சந்திக்க வருகிற பிரமுகர்கள் அனைவரும், கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். பத்திரிகையாளர் சந்திப்புக்கு வருகிற பத்திரிகையாளர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆனால் இதில் டிரம்பின் கருத்துடன் அவரது மனைவி மெலனியாவே ஒத்துபோகவில்லை என தெரிய வந்துள்ளது.

மெலனியா மருத்துவ ரீதியில் பயன்படுத்தக்கூடிய முக கவசம் அணிந்து படம் எடுத்து, அதை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அத்துடன் அவர் ஒரு வீடியோ செய்தியும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி.). கொரோனா வைரஸ் பரவி வருவது குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றன. அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை பின்பற்றுவது கடினமாக உள்ள இந்த தருணத்தில், முக கவசம் அணிந்து கொண்டு தான் பொதுவெளியில் வரவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளன. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இவ்வாறு கூறியதுடன் அவர் முக கவசம் அணிந்து காட்சி தந்திருப்பது, அமெரிக்கர்கள் அனைவரும் முக கவசம் அணிவதற்கு வழிகாட்டு வதாக அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.

Next Story