போரிஸ் ஜான்சன் இதயத்தை தொட்ட நர்சுகள்


போரிஸ் ஜான்சன் இதயத்தை தொட்ட நர்சுகள்
x
தினத்தந்தி 13 April 2020 11:57 PM GMT (Updated: 13 April 2020 11:57 PM GMT)

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனக்கு சிகிச்சை அளித்த நர்சுகள் மற்றும் டாக்டர்களுக்கு தான் நன்றிக்கடன்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்து தேசம் மட்டுமல்ல, பூமிப்பந்தின் ஒவ்வொரு தேசமும் அதிர்ந்துதான் போனது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருக்கிறது என்று சொன்னபோது! கொரோனா வைரசின் பிடியில் சிக்கிய முதல் உலக தலைவர் இந்த போரிஸ் ஜான்சன்தான்.

லண்டன் மாநகரில், டவுனிங் வீதியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து கொண்டு, தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருந்து வந்த நிலையில் 5-ந் தேதி, போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து விட்டது என்று சொல்லிக்கொண்டு உடனடியாக தேசிய சுகாதாரப்பணிகள் துறையின் அங்கமான லண்டன் செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தனர்.

மறுநாளில் அவரது நிலைமை மிக மோசமாக இருக்கிறது என தகவல்கள் வந்தபோது எல்லோரும் பதறித்தான் போனோம். தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்து அவரை காப்பாற்ற கொரோனா வைரசுடன் ஒரு நெடிய போரே நடத்தி இருக்கிறார்கள்.

ஆனால் இப்போதுதான் தெரியவந்திருக்கிறது, போரிஸ் ஜான்சன் மரணத்தின் வாசல் வரைக்கும் போய் திரும்பி இருக்கிறார் என்பது. அது சாதாரணமல்ல. இரவு பகல் பாராமல் அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் என ஒவ்வொருவரும் பம்பரமாக சுழன்று, சிகிச்சை அளித்து போரிஸ் ஜான்சனை காப்பாற்றி இருக்கிறார்கள். 

அவரது உடல்நிலை குறிப்பிடத்தக்க அளவுக்கு விரைவான முன்னேற்றத்தை அடைந்தது. ஆஸ்பத்திரி வார்டுக்குள் நடைப்பயிற்சி மேற்கொள்ளுகிற வகையில் அவரது உடல்நலம் தேறியது. இனி பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று ஆன பிறகு நேற்று முன்தினம் போரிஸ் ஜான்சன் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். 

டவுனிங் வீதி இல்லத்துக்கு திரும்பி இருக்கிறார். அவர் வழக்கமான அரசு பணிகளை கவனிக்க சிறிது காலம் ஆகலாம். ஆனாலும் அவர் நல்ல உணர்வுடன், ஆரோக்கியத்துடன் இருக்கிறார். தன் உயிரைக்காப்பாற்றியது, செயிண்ட் தாமஸ் ஆஸ்பத்திரிதான் என்பதில் அவர் மிகுந்த நம்பிக்கையை கொண்டிருக்கிறார்.

ஆஸ்பத்திரியில் இருந்து இல்லத்துக்கு திரும்பிய நிலையில், அவர் கூறிய நெகிழ்ச்சியான வார்த்தைகள் இவை:-

என் உயிரை காப்பாற்றி இருக்கிறது, என்.எச்.எஸ். (தேசிய சுகாதார பணிகள்துறை). இதில் எனக்கு துளியும் சந்தேகமே இல்லை. அதனால்தான் ஒரு வாரத்துக்கு பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து நான் வெளியேறி இருக்கிறேன்.

டாக்டர்கள், நர்சுகள், மட்டுமல்ல, சுகாதாரப்பணியாளர்கள், சமையல்காரர்கள், பிசியோதெரபிஸ்டுகள், எக்ஸ்ரே வல்லுனர்கள், மருந்தாளுனர்கள் என ஒவ்வொருவரின் தைரியத்தையும் நான் இங்கே பார்த்து விட்டேன். கொரோனா வைரஸ் என்ற உயிர்க்கொல்லி வைரசுக்கு மத்தியில் வந்து அவர் கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

மிகத்திறமையான டாக்டர்கள், தங்கள் துறைகளில் சிறந்த துறைத்தலைவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். சில தினங்களுக்கு முன்னர் அவர்கள் என் வாழ்வில் மிக முக்கியமான முடிவுகளை எடுத்தனர். அவர்களுக்கு நான் என் எஞ்சிய வாழ்நாளெல்லாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

அவர்களை குறிப்பிட்டால், குறிப்பாக என் படுக்கைக்கு பக்கத்தில் 48 மணி நேரம் நின்று கொண்டிருந்த 2 நர்சுகளை குறிப்பிட்டால் அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அவர்கள் நியூசிலாந்து நாட்டில் இருந்து வந்துள்ள ஜென்னி, போர்ச்சுக்கல் நாட்டில் போர்ட்டோ நகருக்கு அருகே இருந்து வந்துள்ள லூயிஸ் ஆவார்கள்.

அந்த இரவுகளின் ஒவ்வொரு விநாடியும் என் உடல், ஆக்சிஜனைப் பெறத் தொடங்கியது. அவர்கள் என்னையே கவனித்துக்கொண்டிருந்தார்கள். என்னையே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். என் நலனிலேயே அக்கறை செலுத்திக் கொண்டிருந்தார்கள். எனக்கு தேவையானபோதெல்லாம் ஒத்தாசை செய்து கொண்டிருந்தனர்.

நாம் இந்த கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம். ஏனென்றால், இந்த நாட்டின் இதயத்துடிப்பே தேசிய சுகாதார பணிகள் துறைதான். இதுதான் நாட்டிலேயே சிறந்தது. இதுதான் வெல்ல முடியாதது. இது அன்பினால் இயக்கப்படுகிறது.

எனவே தேசிய சுகாதாரப்பணிகள் துறைக்கு நான் நன்றி செலுத்துகிறேன். நம் ஒவ்வொருவரின் நன்றியும் உரித்தாகுக.

- இப்படி நெகிழ்ந்திருக்கிறார்.

மரணத்தின் வாயிலுக்கு சென்று விட்டு வந்திருக்கிற போரிஸ் ஜான்சன் முழுமையாக குணம் அடைந்து நாட்டுக்கு சேவை செய்யும் நாளை எதிர்பார்த்து இங்கிலாந்து மக்கள் காத்திருக்கிறார்கள்!

Next Story