கொரோனா பீதிக்கு மத்தியில் தென்கொரியாவில் நாடாளுமன்ற தேர்தல்; விறுவிறு வாக்குப்பதிவு


கொரோனா பீதிக்கு மத்தியில் தென்கொரியாவில் நாடாளுமன்ற தேர்தல்; விறுவிறு வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 16 April 2020 12:10 AM GMT (Updated: 16 April 2020 12:10 AM GMT)

கொரோனா பீதிக்கு தென்கொரியாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

சியோல், 

கொரோனா என்ற ஆட்கொல்லி வைரஸ் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனினும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமால் இருப்பது, ஒருவரையொருவர் தொடுவது மற்றும் கூட்டம் கூடுவதை தவிர்ப்பது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இவை எல்லாம் இல்லாமல், தேர்தல் எனப்படும் ஜனநாயக திருவிழா சாத்தியமாகாது என்பதால் இலங்கை, எத்தியோப்பியா, பிரான்ஸ் உள்ளிட்ட 47 நாடுகள் தேர்தல்களை ஒத்திவைத்துள்ளன.

ஆனால் தென்கொரியா, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நேற்று நாடாளுமன்ற தேர்தலை நடத்தியது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் அங்கு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. எனவே திட்டமிட்டபடி தேர்தல் நடக்குமா என தென்கொரியா மக்கள் சந்தேகம் எழுப்பினர்.

ஆனால் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்த தென்கொரியா அரசு தேர்தலையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இப்படி ஒரு பெருந்தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தலை நடத்துவதால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு குறையும் என்று கருதப்பட்டது.

ஆனால் நோய் தொற்று குறித்த பயம் மக்களை தேர்தலில் இருந்து ஒதுக்கிவைக்கவில்லை. அவர்கள் தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்றுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். அதே சமயம் வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காக்க, தென்கொரியா தேர்தல் ஆணையம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டது.

அதன்படி தேர்தலன்று வாக்குப்பதிவு மையங்களில் கூட்டம் கூடுவது தவிர்க்க ஒரே நாளில் வாக்குப்பதிவை நடத்தாமல், முன் கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்பை மக்களுக்கு ஏற்படுத்தி தந்தது.

கடந்த வாரம் முதலே, தபால் மூலமாகவும், வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்றும் மக்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். அதன்படி நாட்டின் ஒட்டுமொத்த வாக்காளர்களில் 27 சதவீதம் பேர் அதாவது, 1 கோடியே 10 லட்சம் பேர் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர்.

இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

உடல் வெப்பநிலை பரிசோதனை, கைகளை சுத்தம் செய்தல், தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவற்றை பின்பற்றியே தேர்தல் நடத்தப்பட்டது. அதே போல் வாக்காளர்களும் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்தே தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்றினர்.

கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்டவர்களும், வாக்களிக்க சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டிருந்தன. அதே போல் சுகாதார பணியாளர்கள், கொரோனா நோயாளிகளுக்கு என தனி வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story