கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: அவசர நிலையை நாடு முழுவதும் விரிவுபடுத்த ஜப்பான் முடிவு


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: அவசர நிலையை நாடு முழுவதும் விரிவுபடுத்த ஜப்பான் முடிவு
x
தினத்தந்தி 17 April 2020 12:32 AM GMT (Updated: 17 April 2020 12:32 AM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அவசர நிலையை நாடு முழுவதும் விரிவுபடுத்த ஜப்பான் முடிவு செய்துள்ளது.

டோக்கியோ, 

ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் முன்பை விட அதிகரித்துள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவில் 10 ஆயிரத்தை எட்டும் சூழல் உள்ளது. அதே போல் இந்த கொடிய வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 200-ஐ நெருங்கி வருகிறது.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிரதமர் ஷின்ஜோ அபே தலைமையிலான அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள தலைநகர் டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட 7 மாகாணங்களில் பிரதமர் ஷின்ஜோ அபே அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளார். இந்த நிலையில் வைரஸ் பரவலின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்கள் மாகாணங்களிலும் அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டுமென சில ஆளுநர்கள் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஒரு சில மாகாணங்களில் அதன் ஆளுநர்கள் மத்திய அரசிடம் அனுமதி பெறாமல் தாமாகவே அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் நாடு முழுவதும் அவசர நிலையை விரிவுபடுத்த பிரதமர் ஷின்ஜோ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களுடன் ஷின்ஜோ தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

Next Story