டிரம்ப் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி


டிரம்ப் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி
x
தினத்தந்தி 25 April 2020 12:34 AM GMT (Updated: 25 April 2020 12:34 AM GMT)

டிரம்புக்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் கடற்படை பிரிவுகளை குறிவைத்து தாக்கும்படி தங்கள் நாட்டு கடற்படையினருக்கு ஈரான் ராணுவ தளபதி உசேன் சலாமி உத்தரவிட்டுள்ளார்.

டெஹ்ரான், 

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், கடந்த 15-ந்தேதி பாரசீக வளைகுடா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பலை, ஈரான் ராணுவ படகுகள் சுற்றிவளைத்தன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அமெரிக்க போர்க்கப்பலை அச்சுறுத்தினால் ஈரான் ராணுவ படகுகளை சுட்டு அழிக்க கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் அண்மையில் தெரிவித்தார். இந்த நிலையில் டிரம்புக்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் கடற்படை பிரிவுகளை குறிவைத்து தாக்கும்படி தங்கள் நாட்டு கடற்படையினருக்கு ஈரான் ராணுவ தளபதி உசேன் சலாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “அமெரிக்காவின் பயங்கரவாத ராணுவத்தின் கடற்படையில் இருந்து ஏதேனும் போர்க்கப்பல்கள் அல்லது ராணுவப் பிரிவுகள் எங்கள் வணிக கப்பல்களையோ அல்லது எங்கள் போர் கப்பல்களையோ தாக்க முயற்சித்தால், அவர்களின் (அமெரிக்கா) போர்க்கப்பல்கள் அல்லது கடற்படை பிரிவுகளை குறிவைக்க வேண்டும் என்று எங்கள் கடற்படை பிரிவுகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என கூறினார்.

Next Story