கிரீஸ் நாட்டில் கனடா ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது - ஒருவர் பலி; 5 பேர் மாயம்


கிரீஸ் நாட்டில் கனடா ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது - ஒருவர் பலி; 5 பேர் மாயம்
x
தினத்தந்தி 1 May 2020 12:34 AM GMT (Updated: 1 May 2020 12:34 AM GMT)

கிரீஸ் நாட்டு கடலில் கனடா ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ஒருவர் பலியானார். 5 பேர் மாயமாகி உள்ளனர்.

டோரென்டோ, 

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ரஷிய ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் கிரீஸ் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அயோனியன் தீவில் நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன.

இதையொட்டி நேட்டோ உறுப்பு நாடான கனடா தனது விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்களை அங்கு களம் இறக்கி தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அயோனியன் தீவில் இருந்து கனடா ராணுவத்துக்கு சொந்தமான சிகோர்ஸ்கி சி.எச். 124 ரக ஹெலிகாப்டர் வழக்கமான ரோந்து பணிக்காக புறப்பட்டு சென்றது.

ஹெலிகாப்டரில் நேட்டோ படை வீரர்கள் 6 பேர் இருந்தனர். புறப்பட்டு சென்ற சிறிது நேரத்துக்கு பிறகு ராணுவ ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து, மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. நேட்டோ படைக்கு சொந்தமான விமானங்கள் மற்றும் கப்பல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டன.

இது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட டுவிட்டர் பதிவில் “கிரீஸ் நாட்டு கடற்கரையில் நேட்டோ படைக்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கனடா ராணுவ ஹெலிகாப்டர் மாயமாகி உள்ளது. இது குறித்து நான் ராணுவ மந்திரி ஹர்ஜித் சஜ்ஜனுடன் பேசினேன். தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன” என குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே மாயமான கனடா ராணுவ ஹெலிகாப்டர், அயோனியன் தீவில் இருந்து 60 நாட்டிக்கல் தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேட்டோ படைக்கு சொந்தமான படகுகள் உடனடியாக அங்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் இறங்கின. ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.

மற்ற 5 பேரும் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

Next Story