நியூயார்க்கில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு: கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை


நியூயார்க்கில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு: கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 3 May 2020 12:21 AM GMT (Updated: 3 May 2020 12:21 AM GMT)

நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக எஞ்சிய கல்வி ஆண்டு முழுவதும் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும், செப்டம்பர் மாதம்தான் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க், 

அமெரிக்காவில் கொரோனா வைரசின் தொற்று மையமாக நியூயார்க் மாகாணம் பார்க்கப்படுகிறது. அங்குதான் அமெரிக்காவில் அதிகபட்ச எண்ணிக்கையிலானவர்களை இந்த வைரஸ் தாக்கியது. பிற இடங்களை விட இங்குதான் உயிர்ச்சேதமும் அதிகளவில் ஏற்பட்டது.

இப்போதுதான் அங்கு கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. மார்ச் 30-ந் தேதிக்கு பின்னர் இப்போதுதான் முதன்முதலாக ஒரு நாளில் 300-க்கும் குறைவானவர்கள் (289) பலியாகி உள்ளனர்.

தினமும் 1000 பேரை அங்கு கொரோனா வைரஸ் தாக்கி வந்த நிலையில், அது படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்த மாகாணத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்தி மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை திறந்த விட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த தருணத்தில் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ, நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:-

நமது மாணவர்களை கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாப்பது மிக முக்கியமானது. எஞ்சிய கல்வி ஆண்டில் பள்ளிகளை மீண்டும் திறக்க ஏதுவாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்று நாங்கள் கருதவில்லை.

சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் அனைத்து கல்லூரிகளும், பள்ளிகளும் தொடர்ந்து தொலைதூர கல்வியை வழங்கும். எஞ்சிய கல்வி ஆண்டு முழுவதும் உணவு வழங்கப்படும். குழந்தைகள் பராமரிப்பும் செய்யப்படும்.

நாம் இருக்கும் சூழ்நிலைகளில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். புதிய நெறிமுறைகளை புகுத்த வேண்டும். முக கவசங்கள் இன்றி, சமூக இடைவெளிகளை பராமரிக்க இயலாமல் எப்படி பள்ளியை இயக்க முடியும்?

எனவேதான் பள்ளிக்கூடங்களை நாம் எஞ்சிய கல்வி ஆண்டு முழுவதும் மூடியே வைத்திருக்கப்போகிறோம். பள்ளிகளை மீண்டும் திறப்பது பற்றி திட்டங்கள் வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

எனவே பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு முன்பாக கொரோனா வைரசில் இருந்து மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், கல்வி தவிர்த்து பிற திறன்களை வளர்க்கும் பயிற்சிகளை எவ்வாறு அளிப்பது, மாணவர்களின் உடல்நலம், மனநலம் காப்பது எப்படி என்பது பற்றியெல்லாம் திட்டங்கள் தீட்ட வேண்டும் என்று கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ வலியுறுத்தி உள்ளார்.

நியூயார்க் கல்வி முறையில் 700 பொது பள்ளி கல்வி மாவட்டங்கள், 4,800 பள்ளிகள், 1,800 தனியார் பள்ளிகள், 89 மாகாண பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவை உள்ளன. அவற்றில் மொத்தம் 42 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story