கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா கிடுக்கிப்பிடி - ‘இனி இப்படி நடக்காது என்பதற்கு உறுதி அளிக்க வேண்டும்’


கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா கிடுக்கிப்பிடி - ‘இனி இப்படி நடக்காது என்பதற்கு உறுதி அளிக்க வேண்டும்’
x
தினத்தந்தி 3 May 2020 12:29 AM GMT (Updated: 3 May 2020 12:29 AM GMT)

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இதுபோன்று மீண்டும் நடக்காது என்பதை சீன கம்யூனிஸ்டு கட்சி உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து ருத்ரதாண்டவமாடி வருகிறது. பிற உலக நாடுகளை விட இங்குதான் இந்த வைரஸ் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர் களின் எண்ணிக்கை 11 லட்சத்து 32 ஆயிரத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இந்த வைரசால் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் வரையில் பலியாவார்கள் என்று டிரம்ப் நிர்வாகம் கணித்திருந்த நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கையும் 67 ஆயிரத்தை நோக்கி போகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் நிருபர்களிடம் பேசுகையில், “அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்புகள் 1 லட்சத்துக்குள் அடங்கி விடும் என்று நம்புகிறேன். கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்காக, அந்த வைரஸ் தோன்றிய சீன நாட்டுக்கு வரிகள் விதிப்பது என்பது நிச்சயம் ஒரு விருப்ப தேர்வாக உள்ளது. என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். சீனாவைப் பொறுத்தமட்டில் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வெளிப்படையாக சொல்கிறேன், நடந்த விஷயங்களுக்கு நாம் மகிழ்ச்சியாக இல்லை. இது உலகைச்சுற்றிலும் மிக மோசமான சூழலை ஏற்படுத்தி விட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அளித்த ஒரு பேட்டியில் சீனாவுக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளார். அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா வெளிப்படையாக இல்லை. அவர்கள் வெளிப்படையாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் நிச்சயமாக இல்லை.

குறைந்தபட்சம் ஒரு நாள் அல்லது 2 நாட்களுக்கு முன்பாக கூட இன்னும் அந்த வைரசின் மாதிரி நம்மிடம் இல்லை. இந்த ஆபத்தின் நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. அதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்.

கொரோனா வைரஸ் எங்கிருந்து வந்தது என்பது தனக்கு தெரியவில்லை என்று சீனா கூறுகிறது. ஆனால் சீனாவுக்குள் கொரோனா வைரஸ் பற்றி பேச முயற்சித்தவர்களை சந்திக்க அனுமதி இல்லை. அதைப்பற்றி பேசக்கூடாது என்று தடுத்து நிறுத்தி விடுகிறார்கள்.

இது கூட்டாளிகள் செயல்படும் முறையல்ல. நம்பகமான கூட்டாளிகள் என்றால் தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள். அது நமக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

உகான் நகரில் இருந்து இந்த வைரஸ் எப்படி பரவியது என்பதை உலகம் புரிந்துகொள்ள சீன கம்யூனிஸ்டு கட்சி வழிவகையை தெளிவாக கண்டறியும். இந்த நோய் பரவியதற்கு காரணம் யார் என்பதற்கு பொறுப்பு ஏற்க வைக்க வேண்டும். இது போன்று மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதற்கு இது முக்கியம்.

சீனாவில் நிறைய ஆய்வுக்கூடங்கள் உள்ளன. அங்கு என்ன நடக்கிறது என்ற புரிதல் நமக்கு மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. இதற்கு முன்பு கூட அந்த ஆய்வுக்கூடங்களில் இருந்து கசிவுகள் நடைபெற்றுள்ளன.

கொரோனா வைரசை பொறுத்தமட்டில் அது மிக மோசமானது. பேரழிவுகளை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா இதில் தனது பங்களிப்பை செய்ய விரும்புகிறது. இது போன்று ஒன்று மீண்டும் நடக்காது என்பதை உறுதிப்படுத்தும் மிகப்பெரிய பொறுப்பு சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு உள்ளது. அது சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு தெரியும். அதை சீன கம்யூனிஸ்டு கட்சி செய்ய வேண்டும்.

கொரோனா வைரஸ் தோன்றியபோது சீனாவில் என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை முழு உலகுக்கும் உண்டு. இவ்வாறு மைக் பாம்பியோ கூறினார்.

Next Story