கொரோனா வைரஸ் உயிர்ப்பலிக்கு காரணம் என்ன? இங்கிலாந்து வாழ் இந்திய டாக்டர் பேட்டி


கொரோனா வைரஸ் உயிர்ப்பலிக்கு காரணம் என்ன? இங்கிலாந்து வாழ் இந்திய டாக்டர் பேட்டி
x
தினத்தந்தி 4 May 2020 8:13 AM GMT (Updated: 4 May 2020 8:13 AM GMT)

கொரோனா வைரஸ் உயிர்ப்பலிகளுக்கு காரணம் என்ன? என்பது பற்றி இங்கிலாந்து வாழ் இந்திய டாக்டர் விளக்கி உள்ளார்.

லண்டன்,

கொரோனா வைரஸ் உயிர்ப்பலிகள் உலகையே அதிர வைத்து கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ 2 லட்சத்து 46 ஆயிரம் உயிர்கள், இதுவரை கொரோனா வைரசால் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளன.  இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போர்க்களத்தில் முன்நின்று போராடுகிற என்.எச்.எஸ். அரசு பொது மருத்துவ துறையில் பணியாற்றி கொண்டிருக்கிறவர், டாக்டர் அசீம் மல்கோத்ரா. இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் இதய மருத்துவ நிபுணர் மட்டுமல்ல, பேராசிரியரும்கூட.

கொரோனா வைரஸ் பலிக்கு மிக முக்கிய காரணம், மோசமான உணவுதான் என்பது டாக்டர் அசீம் மல்கோத்ராவின் கருத்தாக அமைந்துள்ளது.

இதையொட்டி அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியின்போது கூறியதாவது:-

கொரோனா வைரசால் ஏற்பட்டு வருகிற உயர்ப்பலிகளில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். உடல் பருமனும், அளவு கடந்த எடையும் அறைக்குள் புகுந்த யானைபோல துவம்சம் செய்து விடும். இவைதான் கொரோனா வைரசால் ஏற்படுகிற உயிர்ப்பலிக்கு முக்கிய காரணியாக இருக்கின்றன. இந்த பிரச்சினை முக்கியமாக கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. அதிலும் இந்தியர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில் இந்தியா குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய நாடாக இருக்கிறது. ஏனென்றால் வாழ்க்கை முறை தொடர்பான நோய்களின் தாக்கம் இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக டைப்-2 நீரிழிவு. உயர்ரத்த அழுத்தம், இதயநோய் ஆகிற மூன்றும் கொரோனா வைரசால் ஏற்படுகிற உயிர்ப்பலியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிகப்படியான கொழுப்பால்தான் இது நேர்கிறது.

இப்போது அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் கூட 60 சதவீதத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் அதிக எடை கொண்டவர்களாகவோ, உடல் பருமன் ஆனவர்களாகவோதான் இருக்கிறார்கள்.

அமெரிக்காவை எடுத்து கொண்டால் 8 பேரில் ஒருவர் வளர்சிதை மாற்றத்தில் ஆரோக்கியமானவர்கள். அதாவது, இயல்பான ரத்த அழுத்தம் இருக்கும். ஆண் என்றால் இடுப்பு சுற்றளவு 102 செ.மீ., பெண் என்றால் 88 செ.மீ.க்கும் குறைவாக இருக்கும். இவர்கள் ஆரோக்கியமானவர்கள். ரத்த சர்க்கரையும் இயல்பான அளவு இருக்கும். நல்ல கொழுப்பு ஆரோக்கியமான அளவில் இருக்கும். இதை எல்லோரும் வசப்படுத்த முடியும். அதற்கு தேவை, சில வாரங்கள் உணவு முறையை மாற்றவேண்டியது மட்டும்தான்.

டைப்-2 நீரிழிவு நோய்க்கு பயன்படுத்துகிற மருந்துகள், ஆயுட்காலத்தை மேம்படுத்துதல் அல்லது இறப்பு அபாயத்தை குறைத்தல் ஆகியவற்றுக்கு மிக குறைந்த அளவுதான் பலன் அளிக்கின்றன. ஆனால் பெரும்பாலோருக்கு இது தெரிவதில்லை. மேலும், இந்த மருந்துகள் நிறைய பக்க விளைவுகளுடன் வருபவை ஆகும். மருந்துகளை விட்டுவிடுங்கள் என்று சொல்லவில்லை. உடலை பொறுத்தமட்டில் அதன் ஆரோக்கியத்தில் வாழ்க்கை முறை மாற்றங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை வலியுறுத்தத்தான் இதை சொல்கிறேன்.

எனது சொந்த மருத்துவ அனுபவத்திலும், மருத்துவ புத்தகங்களை கற்றதின் அடிப்படையிலும் நான் கூற விரும்புவது, பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை விட்டுவிடுங்கள். இவை சர்க்கரை, ஸ்டார்ச், ஆரோக்கியம் இல்லாத எண்ணெய்கள், பிற சேர்க்கைகள், பிரிசர்வேடிவ் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டவை. இவை நல்லதல்ல.

இந்தியர்களுக்கு நான் சொல்ல விரும்பும் ஆலோசனை, இந்த வகையான உணவுகளை விட்டு விடுங்கள். புத்தம் புதிதாக சமைத்து சாப்பிடுங்கள்.

இந்திய உணவில் மற்றொரு பிரச்சினை, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதுதான். இவையும் நல்லதல்ல, இவை குளுக்கோஸ், இன்சுலின் அளவை அதிகரித்து விடுகின்றன. இது டைப்-2 நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயநோய் போன்றவற்றில் நாளடைவில் கொண்டு போய் விட்டு விடும். குறிப்பாக அதிகளவில் மாவுசத்து, வெள்ளை அரிசி சாதத்தை குறிப்பிடலாம்.

காய்கறிகள், பழங்கள் அதிகளவில் சாப்பிடலாம். அசைவ உணவு பிரியர்கள் முட்டை, மீன் சாப்பிடலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story