பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது; பலி எண்ணிக்கை 500-ஐ நெருங்குகிறது


பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது; பலி எண்ணிக்கை 500-ஐ நெருங்குகிறது
x
தினத்தந்தி 5 May 2020 12:34 AM GMT (Updated: 5 May 2020 12:34 AM GMT)

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 500-ஐ நெருங்கி வருகிறது.

இஸ்லாமாபாத், 

சீனாவின் உகான் நகரில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ், 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே உலுக்கி வருகிறது. கொரோனா தொற்றால் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதே போல் நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக தீவிரமாக உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் வைரஸ் பரவலின் வேகம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 500-ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதுகுறித்து அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:-

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,186 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா வைரஸ் தாக்கி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 22 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 462 ஆக உயர்ந்திருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று இதுவரை 5,590 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 2 லட்சத்து 12 ஆயிரத்து 511 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில் நாடு கொரோனா தொற்று பயத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டதாக பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், “சுகாதார நெருக்கடியை சமாளிக்க அரசு மேற்கொண்ட தீர்க்கமான நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்று பயத்தில் இருந்து பாகிஸ்தான் மீண்டுவிட்டது” என கூறினார்.

Next Story