கொரோனா வைரஸ் இயற்கையில் உருவானது டிரம்பின் கருத்துக்கு எதிராக அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணர்


கொரோனா வைரஸ் இயற்கையில் உருவானது டிரம்பின் கருத்துக்கு எதிராக அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணர்
x
தினத்தந்தி 6 May 2020 4:35 AM GMT (Updated: 6 May 2020 6:52 AM GMT)

கொரோனா வைரஸ் இயற்கையில் உருவானது டிரம்பின் கருத்துக்கு எதிராக தகவல் வெளியிட்டு உள்ளார் அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணர் அந்தோனி பவுசி.

வாஷிங்டன்

சீனாவின் உகான் நகர ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ உகானில் உள்ள வைராலஜி ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் உருவானது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன என்று கூறியிருந்தார்.

கொரோனா விவகாரத்தில் சீனா உகான் நகர ஆய்வகத்தில் என்ன நடந்தது என்பது குறித்து  நாங்கள் மிகவும் வலுவான அறிக்கையை வெளியிடுவோம். அது மிகவும் முடிவானதாக இருக்கும் என்று டொனால்டு டிரம்ப்  கூறி இருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்க உயர்மட்ட தொற்றுநோயியல் நிபுணர் அந்தோனி பவுசி நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் ஒரு ஆய்வகத்தில் தோன்றியதாக நம்பவில்லை.வவ்வால்களில் வைரஸின் பரிணாம வளர்ச்சியையும் இப்போது உள்ள வைரசையும்  நீங்கள் பார்த்தால், மிக, மிக வலுவாக இது செயற்கையாகவோ அல்லது வேண்டுமென்றே கையாளப்பட்டோ இருக்க முடியாது.

கொரோனா வைரஸ் காலப்போக்கில் படிப்படியான பரிணாம வளர்ச்சியை அடைந்து இயற்கையில் உருவாகி பின்னர் உயிரினங்களைத் தாக்கி உள்ளது என்பதை  இது வலுவாகக் குறிக்கிறது என்று அவர் கூறினார்.

உலக சுகாதார அமைப்பின்  நிபுணர் மரியா வான் கெர்கோவ் ஒரு கூட்டத்தின் போது, கொரோனா வைரசின் 15,000 முழு மரபணு வரிசைமுறைகள் கிடைத்திருப்பதாகவும், நாங்கள் பார்த்த எல்லா ஆதாரங்களிலிருந்தும் ... இந்த வைரஸ் இயற்கையான தோற்றம் கொண்டது" என்றும் வலியுறுத்தி உள்ளார்.

Next Story