போட்டி போட்டு கொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடிக்கும் நிறுவனங்கள்; 2 மருந்துகள் தயார்


போட்டி போட்டு கொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடிக்கும் நிறுவனங்கள்; 2 மருந்துகள் தயார்
x
தினத்தந்தி 6 May 2020 6:54 AM GMT (Updated: 6 May 2020 6:54 AM GMT)

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், இத்தாலியை சேர்ந்த நிறுவனமும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடித்து உள்ளன.

ரோம்

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்துள்ள கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டறியும் பணி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. 

கொரோனா வைரசுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் பைசர், ஜெர்மனியின் பயான்டெக் ஆகியவை இணைந்து ஆர்என்ஏ தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளன.

இதை நியூயார்க் பல்கலைக்கழகம், மேரிலாந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து மனிதர்களுக்கு செலுத்திச் சோதித்துப் பார்க்க உள்ளனர். திங்களன்று சோதனை முறையில் இதைத் தன்னார்வலர் ஒருவருக்குச் செலுத்தி உள்ளனர். 18 வயது முதல் 55 வயது வரை நல்ல உடல்நலமிக்கவர்களுக்கு முதலில் செலுத்திப் பாதுகாப்பை உறுதி செய்துகொண்ட பின்னர், அதிக வயதானவர்களுக்கும் மருந்தைச் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இதுபோல் இத்தாலியின் ரோம் நகரில் செயல்பட்டு வரும் தொற்று நோய் ஸ்பாலன்சானி மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் புதிய தடுப்பு மருந்து ஒன்றைக் கண்டறிந்துள்ளதாக அந்த மருத்துவமனை தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். எலிகளில் நடத்தப்பட்ட இந்தச் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததாகவும், இது மனித செல்களில் உள்ள கரோனா வைரஸை அழிக்கும் திறன் உடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்த மருந்து மனிதர்களுக்கு அளிக்கப்பட்டு சோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story