இங்கிலாந்தில் ஊரடங்குக்கு காரணமான விஞ்ஞானி ராஜினாமா: காதலியுடன் 2 முறை சந்தித்ததால் எழுந்த சர்ச்சை முடிவு


இங்கிலாந்தில் ஊரடங்குக்கு காரணமான விஞ்ஞானி ராஜினாமா: காதலியுடன் 2 முறை சந்தித்ததால் எழுந்த சர்ச்சை முடிவு
x
தினத்தந்தி 6 May 2020 9:29 PM GMT (Updated: 6 May 2020 9:29 PM GMT)

இங்கிலாந்தில் ஊரடங்கு திட்டத்தை உருவாக்கித்தந்த விஞ்ஞானி, தனது காதலியுடன் 2 முறை சந்தித்ததால் எழுந்த சர்ச்சையின் காரணமாக ராஜினாமா செய்துள்ளார்.

லண்டன்,

விஞ்ஞானி நீல் பெர்குசன், காதலி அன்டோனியா.
கொரோனா வைரஸ், இப்போது இங்கிலாந்தில் மாநாடு போட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தானோ என்னவோ ஐரோப்பிய நாடுகளிலேயே இந்த வைரசின் தொற்றுமையமாக அந்த நாடு ஆகி விட்டிருக்கிறது.

அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 500-ஐ கடந்து விட்டதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தகவல் மையத்தின் தரவு சொல்கிறது. ஆனால் இங்கிலாந்து அரசின் புள்ளி விவரங்கள் அங்கு பலி 32 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருப்பதாக காட்டுகிறது.

அந்த அளவுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் அங்கு தீவிரமாகி கொண்டிருக்கிறது. ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறவர்களை காப்பாற்றுவதற்கு டாக்டர்கள் இரவு, பகலாக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் அங்கு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன்படி பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு வடிவத்திலான உடற்பயிற்சிக்காகவும், அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளுக்கும் மட்டுமே செல்ல முடியும்.

லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்றுநோயியல் நிபுணரும், விஞ்ஞானியுமான நீல் பெர்குசன் (வயது 51) தலைமையிலான சாகே என்று அழைக்கப்படக்கூடிய அறிவியல் ஆலோசனை அவசர குழு அளித்த மாதிரி திட்டத்தை ஏற்றுத்தான் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிறப்பித்தார்.

ஆனால் தான் உருவாக்கித்தந்த ஊரடங்கு திட்டமே தனக்கு எதிரியாக வந்து நிற்கும் என்று விஞ்ஞானி நீல் பெர்குசன் நினைத்துக்கூட பார்த்து இருக்க மாட்டார். அவருக்கும், கல்யாணம் ஆகி கணவர், குழந்தைகள் என வாழும் அன்டோனியா ஸ்டாட்ஸ் என்ற பெண்ணுக்கும் இடையே காதல்.

இந்த காதலின் காரணமாக, ஊரடங்கு கால விதிமுறைகளை மீறி காதலி அன்டோனியா ஸ்டாட்ஸ் வீட்டை விட்டு வெளியேறி, காதலர் நீல் பெர்குசனின் லண்டன் வீட்டுக்கு 2 முறை வந்து சென்று இருக்கிறார். இது ஊரடங்கு விதிமுறையை மீறிய செயல்.

அதுவும், நீல் பெர்குசனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 2 வாரங்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டு, அந்த கால கட்டம் முடிந்ததும் இந்த காதல் சந்திப்பு அரங்கேறி இருக்கிறது.

இந்த காதல் சந்திப்பு குறித்து அந்த நாட்டில் இருந்து வெளிவருகிற ‘டெய்லி டெலகிராப்’ பத்திரிகை படம் பிடித்து காட்டியது. வந்தது வினை. எழுந்தது சர்ச்சை. முடிவு, விஞ்ஞானி நீல் பெர்குசன், அறிவியல் ஆலோசனை அவசர குழுவில் இருந்து ராஜினாமா.

அதுதான் வெள்ளைக்காரர்களின் நேர்மை. அன்டோனியா ஸ்டாட்ஸ் அவரது வீட்டில் இருந்து வெளியேறி, லண்டனில் உள்ள தனது வீட்டுக்கு வந்து சென்றதை மனமார ஒப்புக்கொண்டார்.

இது குறித்து அவர் குறிப்பிடுகையில், “நான் செய்த தவறை ஒப்புக்கொள்கிறேன். அது தீர்ப்பின் பிழை ஆகும். நான் தவறான நடவடிக்கை எடுத்து விட்டேன். எனவே நான் அறிவியல் ஆலோசனை அவசர குழுவில் இருந்து ராஜினாமா செய்து விட்டேன்” என கூறினார்.

மேலும், “நான் கொரோனா வைரஸ் தாக்கிய பின்னர் நோய் எதிர்ப்புச்சக்தியை கொண்டுள்ளவன் என்ற நம்பிக்கையில் அவ்வாறு நடந்து கொண்டேன். கொரோனா வைரஸ் சோதனையில் எனக்கு பாதிப்பு இருப்பது உறுதியானவுடன் 2 வார காலம் தனிமைப்படுத்திக்கொண்டேன். இந்த சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்ற தொடர்ச்சியான தேவையை சுற்றியுள்ள தெளிவான தகவல்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன்” என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும், கொரோன வைரஸ் பரவலை தடுப்பதற்கு அறிவியல் ஆலோசனை அவசர குழு அளித்த ஆலோசனைகள் சந்தேகத்துக்கு இடமின்றி இருக்கிறது, மேலும் நம் அனைவரையும் பாதுகாப்பதற்கு அது தேவை என்றும் கூறி உள்ளார்.

இவரது பதவி விலகலை இங்கிலாந்து பாதுகாப்பு மந்திரி ஜேம்ஸ் புரோக்கன்ஷயர் வரவேற்றுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “மூத்த விஞ்ஞானி நீல் பெர்குசன் சரியான முடிவை எடுத்துள்ளார். அரசு தொடர்ந்து அறிவியல் ஆலோசனை அவசர குழு கூறுவதை கேட்கும். எங்களிடம் தொடர்ந்து பல நிபுணர்கள் உள்ளனர்” என குறிப்பிட்டார். இந்த சம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஸ்காட்லாந்தில் டாக்டர் கேதரின் கேல்டர்வுட் என்ற தலைமை பெண் மருத்துவ அதிகாரியும், ஊரடங்கு விதிமுறையை மீறி தனது வீட்டுக்கு 2 முறை பயணம் மேற்கொண்டு, அது குறித்து வெளியே தகவல்கள் பரவி சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து பதவி விலகியது நினைவுகூரத்தக்கது.

Next Story