கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் ஊரடங்கு தளர்வால் தினமும் 3 ஆயிரம் பேர் பலியாவார்கள் எச்சரிக்கை


கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் ஊரடங்கு தளர்வால் தினமும் 3 ஆயிரம் பேர் பலியாவார்கள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 May 2020 2:57 AM GMT (Updated: 7 May 2020 2:57 AM GMT)

அமெரிக்காவில் ஜுன் மாதம் முதல் கொரோனா பாதிப்பால் தினமும் 3 ஆயிரம் பேர் பலியாவார்கள் என்ற கணிப்பு வெளியாகியுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

வாஷிங்டன்

உலகின் வல்லரசு நாடு அமெரிக்கா, தற்போது கொரோனா வைரசின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. உலகெங்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு  எண்ணிக்கை, 37.40 லட்சத்தை தாண்டியுள்ளது. அதில், 2.58 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும், 12.37 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 72 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதாவது உலக பாதிப்பு மற்றும் பலியில், மூன்றில் ஒரு பங்கு, அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் தற்போது, நாளொன்றுக்கு, 20 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது. அதேபோல், தினசரி, குறைந்த பட்சம், 1,000 பேர் பலியாகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார். இதனால், பல மாகாணங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

ஜார்ஜியா, மிசிசிப்பி, டென்னிசி, டெக்சாஸ், இல்லினாய்ஸ், அலாஸ்கா, அரிசோனா, ஆர்கன்சாஸ், கொலரோடோ, புளோரிடா, கன்சாஸ், மின்னசோட்டா, மிசவுரி, மோண்டனா, நெப்ராஸ்கா, நியுஹம்ப்ஷயர், ஓஹியோ, தெற்கு கரோலினா, வெர்மாண்ட், மேற்கு வெர்ஜீனியா ஆகியவை கட்டுப்பாடுகளை நீக்கிய மாகாணங்களாக உள்ளன.

தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு மற்றும் பலியை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அபாயம் நிச்சயம் உள்ளது. இதற்கு மேலும் தவறு செய்ய வேண்டாம். கட்டுப்பாடுகள் இருந்த காலத்தைவிட, தற்போது மிக மோசமான நிலை உள்ளது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

இந்நிலையில் அங்கு உள்நாட்டு வரைவு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.அதில், வரும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் தாக்கி தினமும் 3 ஆயிரம் பேர் இறப்பார்கள் என கணித்து சொல்லப்பட்டுள்ளது.தினசரி சுமார் 2 லட்சம் பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதால்,இந்த தகவல்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த வரைவு அறிக்கையை தயாரித்தவர், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புளூம்பெர்க் சுகாதார கல்லூரியின் தொற்றுநோய் பேராசிரியர் ஜஸ்டின் லெஸ்லர் என்று கூறப்படுகிறது.

Next Story