கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்தை அதிகாரப்பூர்வமாக்கியது ஜப்பான்


கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்தை அதிகாரப்பூர்வமாக்கியது ஜப்பான்
x
தினத்தந்தி 7 May 2020 4:57 PM GMT (Updated: 7 May 2020 5:09 PM GMT)

கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்தை ஜப்பான் அதிகாரப்பூர்வமாக்கி உள்ளது.

டோக்கியோ,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை தற்போது 2,67,741 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் 210 நாடுகளில் மொத்தம் 38,70,581 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். மேலும் 13,26,661 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலாவது இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் ஏற்படும் நோய்க்கான அவசரகால பயன்பாட்டிற்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் கடந்த வாரம் ரெம்டெசிவிர் மருந்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

கொரோனாவுக்கு வேறு எந்த அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையும் இல்லாததால், இந்த மருந்து மீதான ஆர்வம் உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஜப்பானில் கொரோனா சிகிச்சைக்காக கைலிட் சயின்சஸ் நிறுவனத்தின் ரெம்டெசிவிர் மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கடுமையான கொரோனா வைரசின் அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஜப்பானில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 15,253 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் நோய் தொற்றுக்கு இதுவரை 556 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற பெரிய தொழில்மயமான நாடுகளை விட குறைவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளபோதிலும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால் நாட்டின் சில பகுதிகளில் மருத்துவ வசதிகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.

முன்னதாக ஜப்பானில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதம் இறுதிவரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் ஷின்சே அபே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


Next Story