கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர்களை சுரண்டாதீர்கள் - போப் ஆண்டவர் வேண்டுகோள்


கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர்களை சுரண்டாதீர்கள் - போப் ஆண்டவர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 8 May 2020 12:37 AM GMT (Updated: 8 May 2020 12:37 AM GMT)

கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர்களை சுரண்டாதீர்கள் என்று போப் ஆண்டவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாடிகன், 

கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்தால் கார் விற்பனை தொடங்கி கடலை மிட்டாய் விற்பனை வரை அனைத்து விதமான தொழில்களும் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கும், நாட்டுக்குள்ளேயே வெவ்வேறு மாநிலங்களுக்கு சென்றும் வேலை பார்த்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் கொரோனா வைரசை காரணம் காட்டி ஆள்குறைப்பு செய்வது, தொழிலாளர்களின் ஊதியத்தை குறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் கொரோனா வைரசை காரணம் காட்டி தொழிலாளர்களை சுரண்டாதீர்கள் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாடிகனில் நூலகத்தில் இருந்து உரையாற்றிய போப், “நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் கண்ணியத்தை மதித்து நடக்க வேண்டும். கொரோனா வைரசின் தாக்கம் அனைவரையும் பாதிக்கிறது உண்மை தான் எனினும், தொழிலாளர்களின் கண்ணியத்தையும் கட்டாயம் மதிக்க வேண்டும்” என கூறினார்.

கடந்த 1-ந்தேதி உழைப்பாளர் தினத்தன்று, நிறைய தொழிலாளர்கள் தங்களின் அவலநிலை குறித்து தனக்கு தெரிவித்ததாக கூறிய போப், கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர்களை, குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சுரண்ட கூடாது என கேட்டுக் கொண்டார்.

Next Story