இங்கிலாந்தில் ரூ.1.5 கோடி முக கவசங்கள் திருட்டு


இங்கிலாந்தில் ரூ.1.5 கோடி முக கவசங்கள் திருட்டு
x
தினத்தந்தி 9 May 2020 1:59 AM GMT (Updated: 9 May 2020 1:59 AM GMT)

இங்கிலாந்தில் ரூ.1.5 கோடி மதிப்பிலான முக கவசங்களை வேன்களில் வந்து கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.

லண்டன்,

இங்கிலாந்தின் புகழ்பெற்ற தொழில் நகரான மான்செஸ்டரின் புறநகர் பகுதி சல்போர்ட். இங்குள்ள மருத்துவ உபகரணங்கள் சேமிப்பு குடோன் ஒன்றில் கொரோனா நோய்க்கு சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய சுகாதார சேவை பணியாளர்களுக்கு வழங்குவதற்காக 1 லட்சத்து 66 ஆயிரம் பவுண்டுகள் மதிப்பிலான (இந்திய பணத்துக்கு ரூ.1.5 கோடி) 80 ஆயிரம் முக கவசங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 3 வேன்களில் வந்த 3 மர்ம நபர்கள் இந்த குடோனுக்குள் புகுந்து 80 ஆயிரம் முக கவசங்களையும் திருடினர். பின்னர் தாங்கள் வந்த வேன்களில் அவற்றை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இங்கிலாந்தில் சுகாதார சேவை பணியாளர்களுக்கு தேவைப்படும் சுய பாதுகாப்பு உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் 80 ஆயிரம் முக கவசங்கள் திருடு போய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பலத்த பாதுகாப்பு நிறைந்த இப்பகுதியில் நடந்துள்ள இந்த துணிகர திருட்டு மான்செஸ்டர் நகர போலீசுக்கு பலத்த சவாலையும் விடுத்து இருக்கிறது.

Next Story