அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கொரோனா


அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 May 2020 11:45 PM GMT (Updated: 9 May 2020 5:04 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்காவில் தீவிரமாக பரவி வருகிற கொரோனா வைரஸ், அந்த நாட்டின் ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகையையும் விட்டு வைக்கவில்லை.

சில தினங்களுக்கு முன்னர் வெள்ளை மாளிகையில் பணியாற்றி வந்த ராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. உடனே அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதி டிரம்புக்கும், துணை ஜனாதிபதி மைக் பென்சுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது.

இந்த நிலையில் துணை ஜனாதிபதி மைக் பென்சின் ஊடக செயலாளர் கேட்டி மில்லர் என்ற பெண்ணையும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது. இதை ஜனாதிபதி டிரம்பே அறிவித்தார். இருப்பினும், வெள்ளை மாளிகையில் கொரோனா வைரஸ் பரவுவதால் தான் கவலைப்படவில்லை என்று கூறினார்.

அதே நேரத்தில் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. கேட்டி மில்லர், துணை ஜனாதிபதி மைக் பென்சுடன் தொடர்பில் இருந்தார் என்றும், ஜனாதிபதி டிரம்புடன் அவர் தொடர்பில் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த பெண்ணின் கணவர் ஸ்டீபன் மில்லர், டிரம்பின் ஆலோசகர்களில் ஒருவர் ஆவார். இவருக்கு கொரோனா சோதனை நடந்ததா, இவர் வெள்ளை மாளிகையில் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கிறாரா என தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

கேட்டி மில்லருடன் தொடர்பில் இருந்த 6 பேர், துணை ஜனாதிபதி மைக் பென்சுடன் இயோவா மாகாணத்தில் உள்ள டெஸ்மொய்னேஸ் நகருக்கு விமானத்தில் செல்ல இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அவர்கள் துணை ஜனாதிபதியுடன் செல்வோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தியதில், தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.

வெள்ளை மாளிகைக்குள்ளும் கொரோனா வைரஸ் ஊடுருவி விட்டது, அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story