ஈரானில் போர் பயிற்சியின் போது விபரீதம்: கப்பலில் ஏவுகணை தாக்கி 19 வீரர்கள் பலி


ஈரானில் போர் பயிற்சியின் போது விபரீதம்: கப்பலில் ஏவுகணை தாக்கி 19 வீரர்கள் பலி
x
தினத்தந்தி 12 May 2020 12:15 AM GMT (Updated: 12 May 2020 12:33 AM GMT)

ஈரானில் போர் பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக கப்பலில் ஏவுகணை தாக்கியதில் 19 வீரர்கள் பலியாகினர்.

டெஹ்ரான், 

ஈரானுடன் வல்லரசு நாடுகள் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் அமெரிக்கா வெளியேறியது. இது இருநாடுகளுக்கும் இடையிலான மோதலுக்கு வழி வகுத்தது. ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. அதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட விதிகளை புறக்கணிப்பதாக ஈரான் அறிவித்தது.

இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈரானை அச்சுறுத்தும் விதமாக மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு போர்க்கப்பல்களை அனுப்பியது. இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நீடிக்கிறது. ஆனால் இந்த பதற்றத்துக்கு மத்தியிலும் ஓமன் வளைகுடா மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் கடற்படை தொடர்ச்சியாக போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் ஈரானின் ஹென்டிஜான் நகரில் ஜாஸ்க் துறைமுகத்துக்கு அருகே ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கடற்படை நேற்று முன்தினம் வழக்கம் போல் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த பயிற்சியின் போது கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் ஏவி பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டது. ஏவுகணைகள் தாக்கி அழிக்க வேண்டிய இலக்குகளை கடலில் ஆங்காங்கே நிலைநிறுத்தும் பணியில் கொனாரக் என்ற கப்பல் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

இலக்குகளை நிறுத்திய பிறகு கொனாரக் கப்பல் அவற்றுக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்தது. அதனை தொடர்ந்து, போர்க்கப்பலில் இருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் ஏவப்பட்டன. அப்போது அந்த ஏவுகணைகளில் ஒன்று இலக்கை நோக்கி நகரமால் திசைமாறி சென்றது. பின்னர் அந்த ஏவுகணை கொனாரக் கப்பல் மீது விழுந்து வெடித்து சிதறியது.

இதில் கொனாரக் கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 15 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு ஈரான் கடற்படை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவுடன் போர் பதற்றம் நீடித்த சமயத்தில் தலைநகர் டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் பயணிகள் விமானத்தை, எதிரி நாட்டு போர் விமானம் என நினைத்து ஈரான் விமானப்படை ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததும், அதில் விமானத்தில் பயணம் செய்த 176 பேர் பலியானதும் நினைவுகூரத்தக்கது.

Next Story