கொரோனா பாதிப்புகள்: ரஷ்யா தனது இறப்பு விகிதத்தை குறைத்து காட்டுவதாக குற்றச்சாட்டு


கொரோனா பாதிப்புகள்: ரஷ்யா தனது இறப்பு விகிதத்தை குறைத்து காட்டுவதாக குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 May 2020 2:04 PM GMT (Updated: 14 May 2020 2:04 PM GMT)

கொரோனா பாதிப்புகள் தொடர்பாக, ரஷ்யா தனது இறப்பு விகிதத்தை குறைத்து காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாஸ்கோ, 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 44,64,726 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,99,418 பேர் உயிரிழந்துள்ளனர். 

உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.  

அங்கு இன்று மேலும் 9,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,52,245 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை அங்கு 2,305 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் தொடர்பாக, ரஷ்யா தனது இறப்பு விகிதத்தை குறைத்து காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.50 லட்சத்தை தாண்டியுள்ளநிலையில், அங்கு எவ்வாறு இறப்பு விகிதம் இவ்வளவு குறைவாக உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஷ்ய அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் நம்பும்படியாக இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை கூறுகையில், “ கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களுக்கு ஏற்கனவே மிகவும் மோசமான வேறு உடல்நல பாதிப்புகள் இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற காரணத்தினால் பெரும்பாலான உயிரிழப்புகளை கொரோனா வைரஸ் மரணங்கள் பட்டியலில் சேர்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளது. 

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் ஸ்பெயினும் உள்ளன. 


Next Story