வீதிகளில் கிருமி நாசினிகள் தெளிப்பது பலனளிக்காது- உலக சுகாதார அமைப்பு தகவல்


வீதிகளில் கிருமி நாசினிகள் தெளிப்பது பலனளிக்காது- உலக சுகாதார  அமைப்பு தகவல்
x
தினத்தந்தி 18 May 2020 1:14 AM GMT (Updated: 18 May 2020 1:14 AM GMT)

வீதிகளில் கிருமி நாசினிகள் தெளிப்பதால் பலனில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனீவா,

கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும், திறந்த வீதிகளில் கிருமி நாசினிகள் அடிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளன. ஆனால், திறந்த வெளிகளில் கிருமி நாசினிகளைத் தெளிப்பதால் கொரோனா வைரஸ் செயலற்று போகும் என்பதை எந்த சான்றுகளும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறும் போது, “ கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக சில நாடுகளில் வீதிகள், சந்தைப் பகுதிகள்  போன்ற திறந்த வீதிகளில்  கிருமி நாசிகள் தெளிக்கப்படுகின்றன.  ஆனால்,  இது எந்த வகையிலும் பலனளிக்காது. ஏனெனில்,  திறந்த வெளிகளில் காணப்படும் தூசிகள், துகள்கள் காரணமாகக் கிருமி நாசினிகள் அதன் வீரியத்தை இழந்து விடும். 

எனவே, கொரோனா வைரஸ் உள்பட எந்த வைரசையும்  திறந்த வெளிகளில் கிருமி நாசினிகள் தெளிப்பதன் மூலம் செயலற்றதாக்க முடியாது. தெருக்களும் நடைபாதைகளும்  கொரோனாவின் உறைவிடங்களாகக் கருதப்படுவதில்லை. வீதிகளில், கிருமி நாசினிகள் தெளிப்பது மனிதனின் உடல் நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே, எந்த சூழலிலும், வீதிகளில் கிருமி நாசினிகள் தெளிப்பதை உலக சுகாதார அமைப்பு ஆதரிக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story