"எங்கள் போர்க்கப்பல்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருங்கள்" ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை


எங்கள் போர்க்கப்பல்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருங்கள் ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 May 2020 3:37 AM GMT (Updated: 21 May 2020 3:37 AM GMT)

அமெரிக்கா தனது போர்க்கப்பல்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்குமாறு ஈரானுக்கு எசரிக்கை விடுத்து உள்ளது.இதனால் போர்ப்பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

வாஷிங்டன்

அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் மீண்டும் போர்ச் சூழல் ஏற்பட்டு வந்த நிலையில், இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கிய போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது.

அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க இராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கிடையே மீண்டும் மோதல் வலுத்து வந்தது.

இந்த நிலையில் வளைகுடா பகுதியில் கடந்த மாதம் 11 ஈரானிய கப்பல்கள் அமெரிக்க கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்களுக்கு அருகில் வந்தது. இதை தொடர்ந்து அச்சுறுத்தும் விதமாக ஈரானியக் கப்பல்கள் நடந்து கொண்டால் அவற்றை அழித்துவிடுங்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்கக் கடற்படைகளுக்கு உத்தரவிட்டார். 

அவ்வாறு தாக்குதல் நடத்தினால், வளைகுடா பகுதியில் இருக்கும் அமெரிக்கக் கப்பல்கள் தரைமட்டமாக்கப்படும் என்று ஈரான் மேஜர் ஜெனரல் ஹூசைன் சலாமி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சமீபத்திலும் அமெரிக்கா ஈரானுக்கு மிரட்டல் விடுத்திருந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி வளைகுடா பகுதியில் ஈரான் தனது வழக்கமான கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து ஈரானிய இராணுவ அதிகாரி கூறுகையில், கடந்த காலங்களைப் போல சர்வதேச கடற்படை விதிகளுக்கு உட்பட்டு ஈரான் வளைகுடா பகுதியில் தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா அமெரிக்க போர்க்கப்பல்களிலிருந்து 100 மீட்டர் (109 கெஜம்) தொலைவில் இருக்குமாறு ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தது அல்லது ஆபத்து "அச்சுறுத்தலாக விளக்கப்பட்டு சட்டபூர்வமான தற்காப்பு நடவடிக்கைகளுக்கு உட்படும் என கூறி உள்ளது.

Next Story