ஹிட்லர் வளர்த்த முதலை சாவு


ஹிட்லர் வளர்த்த முதலை சாவு
x
தினத்தந்தி 24 May 2020 9:45 PM GMT (Updated: 24 May 2020 8:30 PM GMT)

ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோ, 

சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு பெயர் போன நாஜி படைகளின் தலைவர் ஹிட்லர் பெர்லினில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவுக்கு சென்று அங்குள்ள விலங்குகள் மற்றும் உயிரினங்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த பூங்காவுக்கு அமெரிக்காவில் 1936-ம் ஆண்டு பிறந்த முதலை ஒன்று பரிசாக வழங்கப்பட்டிருந்தது. சடோன் என்ற பெயர் சூட்டப்பட்டிருந்த அந்த முதலையையும் ஹிட்லர் அடிக்கடி பார்வையிட்டு வந்தார்.

இதனால், அந்த முதலை ஹிட்லரின் விரும்பமான உயிரினம் என்றும் அதை அவர் வளர்த்து வந்தார் என்றும் பரவலாக பேசப்பட்டது. ஆனால் அதை உறுதிப்படுத்துவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதற்கிடையில், 1943-ம் ஆண்டு 2-ம் உலகப்போர் உச்சத்தில் இருக்கும் போது செம்படைகள் பெர்லின் நகரில் வான்வெளி தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதலில் ஹிட்லர் அடிக்கடி சுற்றிப்பார்த்த அந்த உயிரியல் பூங்காவும் அழிவை சந்தித்தது. இதில் ஹிட்லர் அடிக்கடி பார்வையிட்ட சடோன் முதலையும் உயிரிழந்து விட்டதாக கருதப்பட்டது. ஆனால், நாஜி படைகள் சரணடைந்த பின்னர் 1946-ம் ஆண்டு ஜெர்மனியில் பாதுகாப்பு பணியில் இங்கிலாந்து வீரர்கள் சிலர் சடோன் முதலையை கண்டுபிடித்தனர்.

பின்னர் அந்த முதலை ரஷியாவில் உள்ள மாஸ்கோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள உயிரியல் பூங்காவில் முதலை சடோன் வளர்க்கப்பட்டு வந்தது. இந்த முதலை ஹிட்லரால் வளர்க்கப்பட்டு வந்தது என்று பரவலாக பேசப்பட்டதால் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து முதலையை பார்த்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில், 84 வயது நிரம்பிய சடோன் முதலை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துவிட்டதாக மாஸ்கோ உயிரியல் பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சேட்டர்னை 74 ஆண்டுகளாக வளர்த்த பெருமை எங்களுக்கு உண்டு’ என அந்த உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story