அமெரிக்காவில் ராணுவ வீரர் நினைவு தினத்தில் துப்பாக்கி சூடு; 9 பேர் பலி


அமெரிக்காவில் ராணுவ வீரர் நினைவு தினத்தில் துப்பாக்கி சூடு; 9 பேர் பலி
x
தினத்தந்தி 26 May 2020 3:43 AM GMT (Updated: 26 May 2020 3:43 AM GMT)

அமெரிக்காவின் சிகாகோ நகரில் ராணுவ வீரர் நினைவு தினத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

சிகாகோ,

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிர அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.  வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, உலக அளவில் கொரோனா தொற்று இறப்பு விகிதத்தில் முதல் இடத்தில் உள்ளது.

அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 99 ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அனைவரும் வீடுகளில் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  அதனுடன், கடுமையான புயல்களும் அந்நாட்டை உருக்குலைத்து வருகிறது.

அமெரிக்காவில் ஒவ்வொரு வருட மே மாதத்தின் இறுதி திங்கட்கிழமை, ராணுவத்தில் பணியாற்றி உயிரிழந்த வீரர், வீராங்கனைகளை நினைவுகூரும் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.  அந்நாளில் விடுமுறை விடப்படும்.  அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசிக்கும் பொதுமக்கள் ராணுவ அருங்காட்சியகம், நூலகம் போன்றவற்றிற்கு செல்வார்கள்.

இது தவிர்த்து, விடுமுறை நாளை கழிக்க பீச், ஏரிக்கு மக்கள் செல்வர்.  மோட்டார் சைக்கிள்களில் நகர்வலம் வருவர்.  இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் நினைவுதின விடுமுறையில் கூடி இருந்தவர்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 2019ம் ஆண்டு இதேபோன்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேர் பலியாகினர்.  43 பேர் காயமடைந்தனர்.  2016ம் ஆண்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.  69 பேர் காயமடைந்தனர்.  இதேபோன்று 2015ம் ஆண்டில் பலி எண்ணிக்கை 12 ஆக இருந்தது.

Next Story