பிரதமரின் ஆலோசகர் ஊரடங்கை மீறிய விவகாரம்: இங்கிலாந்து மந்திரி திடீர் ராஜினாமா


பிரதமரின் ஆலோசகர் ஊரடங்கை மீறிய விவகாரம்: இங்கிலாந்து மந்திரி திடீர் ராஜினாமா
x
தினத்தந்தி 26 May 2020 10:15 PM GMT (Updated: 26 May 2020 8:39 PM GMT)

பிரதமரின் ஆலோசகர் ஊரடங்கை மீறிய விவகாரத்தில், இங்கிலாந்து மந்திரி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

லண்டன், 

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் மூத்த உதவியாளரும், அவரது தலைமை உத்தி ஆலோசகராகவும் இருப்பவர் டொமினிக் கம்மிங்ஸ். இவர், கொரோனா பரவலை தடுக்க அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவர் வீட்டை விட்டு வெளியேறி 250 மைல் தொலைவில் உள்ள தனது பெற்றோர் இல்லத்துக்கு சென்று வந்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஊரடங்கு விதிகளை மீறிய அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அவரது சொந்த கட்சியான கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களே அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

இந்த நிலையில் டொமினிக் கம்மிங்ஸ் விவகாரத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக ஸ்காட்லாந்து மந்திரியான டக்ளஸ் ரோஸ் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டக்ளஸ் ரோசின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், எனினும் அவரது முடிவுக்காக வருத்தப்படுவதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஸ்காட்லாந்து மந்திரியின் ராஜினாமா டொமினிக் கம்மிங்ஸ் விவகாரத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story