காவலில் கருப்பர் பலியால் போராட்டம் வலுக்கிறது: அமெரிக்காவில் போலீஸ் நிலையத்துக்கு தீ


காவலில் கருப்பர் பலியால் போராட்டம் வலுக்கிறது: அமெரிக்காவில் போலீஸ் நிலையத்துக்கு தீ
x
தினத்தந்தி 29 May 2020 10:15 PM GMT (Updated: 29 May 2020 8:57 PM GMT)

அமெரிக்காவில் காவலில் இருந்த கருப்பர் பலியானதால், போராட்டம் வலுத்து வருகிறது. மேலும் போலீஸ் நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டது.

வாஷிங்டன், 

அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் போலீஸ் காவலில் கருப்பர் இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிலாய்டு (வயது 46) என்பவர் கடந்த 25-ந் தேதியன்று சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் உயிரிழந்தார். இது அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று குடுமபத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசு வக்கீல்கள் இதில் இன்னும் ஆதாரங்களை சேகரித்து வருவதாக கூறுகின்றனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து கருப்பர் இனத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் அவர்கள் மினியாபொலிஸ் போலீஸ் நிலையத்தின் முன் தொடர்ந்து 3-வது நாளாக அவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் வெடித்தனர். ஆனால் இதில் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் போலீஸ் நிலையத்தையும், அதன் அருகில் இருந்த 2 கட்டிடங்களையும் தீயிட்டு கொளுத்தினர். இதற்கு ஜனாதிபதி டிரம்ப் கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், “ஜார்ஜ் பிலாய்டின் நினைவை குண்டர்கள் அவமதிக்கின்றனர்” என குறிப்பிட்டார்.

இதற்கிடையே ஜார்ஜ் பிலாய்டு சாவு தொடர்பாக சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், மெம்பிஸ் நகரங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது.

Next Story