ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை எடுத்த பின்னர் டிரம்ப் மிகவும் நன்றாக உணர்கிறார்: வெள்ளை மாளிகை தகவல்


ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை எடுத்த பின்னர் டிரம்ப் மிகவும் நன்றாக உணர்கிறார்: வெள்ளை மாளிகை தகவல்
x
தினத்தந்தி 29 May 2020 11:00 PM GMT (Updated: 29 May 2020 9:26 PM GMT)

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை எடுத்த பின்னர் டிரம்ப் மிகவும் நன்றாக உணர்வதாக, வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன், 

கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சையில் மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் நன்றாக வேலை செய்வதாக தகவல்கள் வெளியாகின.

அதைத் தொடர்ந்து இந்த மாத்திரைகள், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் திருப்புமுனை ஏற்படுத்துபவை என டிரம்ப் கூறினார். பிரதமர் மோடியுடன் பேசி கோடிக்கணக்கில் இந்த மாத்திரைகளை வரவழைத்தார்.

ஆனால் இந்த மாத்திரை எடுத்துக்கொள்கிறபோது அமெரிக்காவில் இறப்புவீதம் அதிகரிக்கிறது என ஆய்வுத்தகவல்கள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு இந்த மாத்திரைகளை கொடுத்து சோதிப்பதை உலக சுகாதார நிறுவனம் நிறுத்தியது.

ஆனால் இதையெல்லாம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிராகரித்தார். அவர் ஒரு படி மேலாக, தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பு மருந்தாக அந்த மாத்திரைகளை 2 வாரங்களாக எடுத்தார்.

இதுபற்றி வாஷிங்டன் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கெய்லீ மெக்னானியிடம், ஜனாதிபதி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டது பற்றி நேற்று முன்தினம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர், “இங்கே நான் வருவதற்கு முன்பு ஜனாதிபதியிடம் இது பற்றி விசாரித்தேன். அவர் நான் மிக நன்றாக உணர்கிறேன். இது முற்றிலும் நன்றாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். ஒரு வேளை தனக்கு மீண்டும் தேவை என்று அவர் உணர்ந்தால் அதை அவர் மறுபடியும் எடுத்துக்கொள்வார்” என பதில் அளித்தார்.

Next Story