கொரோனா வைரசால் உலக அளவிலான உற்பத்தியில் ரூ.637 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: ஐ.நா.சபை கணிப்பு


கொரோனா வைரசால் உலக அளவிலான உற்பத்தியில் ரூ.637 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: ஐ.நா.சபை கணிப்பு
x
தினத்தந்தி 29 May 2020 11:15 PM GMT (Updated: 29 May 2020 9:33 PM GMT)

கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலக அளவிலான உற்பத்தியில் ரூ.637 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கணித்துள்ளார்.

நியுயார்க், 

கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் என்ற கொடிய வைரஸ், இன்றைக்கு சுமார் 200 நாடுகளில் கால் பதித்து விட்டது. இந்த வைரஸ் தொற்று, நேற்று மதிய நிலவரப்படி 58 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் தொற்று பாதித்துள்ளது.

அது மட்டுமின்றி, இந்த வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்றும் பலனற்ற நிலையில், 3 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானோரை உயிரிழக்க வைத்திருக்கிறது.

இந்த வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக உலகமெங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, பொருளாதாரத்தை உலுக்கி விட்டது. தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முடங்கியதால் இதுவரை உலகம் காணாதவகையில் பொருளாதார பேரழிவை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், நியுயார்க்கில் வளர்ச்சிக்கான நிதி உதவி குறித்த உயர் மட்ட கூட்டம் ஒன்றில் ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் நேற்றுமுன்தினம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “ உலகம் இதுவரை கண்டிராத அளவுக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஒற்றுமையுடனும், ஒருங்கிணைந்தும் பதில் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இப்போது இதை செய்யாவிட்டால், கொரோனா வைரஸ் தொற்று நோயானது, உலகம் முழுவதும் கற்பனை செய்ய முடியாத பேரழிவையும், துன்பத்தையும் ஏற்படுத்தி விடும். மேலும் 6 கோடி மக்களை அது ஏற்கனவே வறுமையில் ஆழ்த்தி விட்டது. உலகின் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் சரி பாதியளவு, அதாவது 160 கோடிப்பேர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்” என வேதனையுடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோயானது உலகளவில் உற்பத்தியில் 8½ டிரில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.637 லட்சம் கோடி) இழப்பை ஏற்படுத்தி விடும். இது 1930-களில் ஏற்பட்ட பெருமந்த நிலைக்கு பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலை ஆகும்” என்று கூறினார்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து, ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருடன் ஆன்லைன் வழியில் பத்திரிகையாளர் சந்திப்பில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், “உலகம் பெரும் பலவீனங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. பலவீனமான சுகாதார அமைப்புகள், சிக்கலான பருவநிலை மாற்றம், சமத்துவமின்மை நிலவுகிறது. அணு ஆயுத பரவல் அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது. சைபர் ஸ்பேஸ்சின் சட்டவிரோதம் வரை எல்லா இடங்களிலும் இந்த பலவீனத்தின் அறிகுறிகளை நாங்கள் பார்க்கிறோம். இந்த எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிப்பது புத்தியில்லாத ஆணவம் ஆகும்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “நாம் ஒரு நிலையான முதலீடு செய்ய வேண்டும்” என்றும் கூறினார்.

மேலும், “ அமெரிக்காவும், சீனாவும் எங்கள் பணியில் பங்கேற்றன. ஆனால் தற்போது அந்த நாடுகள் வர்த்தகம், கொரோனா வைரஸ் தோற்றம், ஹாங்காங் விவகாரம் உள்ளிட்ட பலவிதமான பிரச்சினைகள் காரணமாக வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ளன. ஆனாலும் அவர்கள் நமது பணிக்குழுவில் ஈடுபடுவார்கள். அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு ஒரு அர்ப்பணிப்பு உள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம்” என்று கூறினார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசுகையில், “ கொரோனா வைரஸ் தொற்றுநோய், நம் உலகம் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கிறது என்பதை காட்டுவதற்கான ஒரு தெளிவான நிை-வூட்டலை ஏற்படுத்தி உள்ளது. நாம் நமது மக்களை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு இந்த கொரோனா வைரசை தோற்கடிக்க வேண்டும். இதற்கு உலகளாவிய மற்றும் ஒருங்கிணைந்த திட்டம் தேவைப்படுகிறது. இது உலகாளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதாரங்களை மீண்டும் முன்னேற்ற உதவும். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வேலைகள் மற்றும் வணிகங்கள் பிற இடங்களில் உள்ள பொருளாதாரங்களின் ஆரோக்கியம் மற்றும் ஸ்திரத்தன்மையை சார்ந்து உள்ளது” என்று குறிப்பிட்டார்

Next Story