கருப்பர் சாவால் அமெரிக்காவில் போராட்டம் தீவிரம்; 25 நகரங்களில் ஊரடங்கு


கருப்பர் சாவால் அமெரிக்காவில் போராட்டம் தீவிரம்; 25 நகரங்களில் ஊரடங்கு
x
தினத்தந்தி 1 Jun 2020 1:55 AM GMT (Updated: 1 Jun 2020 8:39 AM GMT)

போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கருப்பர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால், அமெரிக்காவில் போராட்டங்கள் தீவிரம் அடைகின்றன. 25 நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் கருப்பு இன மக்கள், வெள்ளை இன போலீசாரால் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது.

இந்த நிலையில் அங்குள்ள மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகரான மினியாபொலிஸ் நகரத்தில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக வெளியான வீடியோவில், கார் டயருக்கு அடியில் அவர் சிக்கி இருந்ததும், அவரது கழுத்தில் ஒரு போலீஸ் அதிகாரி தனது முழங்காலால் நெரித்ததும், அவர் மூச்சு விட முடியவில்லை என கதறியதும் காட்சிகளாகி இருந்தது.

அவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கருப்பு இன மக்கள் ஆவேச போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 போலீஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டாலும், ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தினை தனது முழங்காலைக்கொண்டு நெரித்த போலீஸ் அதிகாரி மட்டும் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஆனால் தொடர்புடைய 4 போலீஸ் அதிகாரிகளையும் கைது செய்து கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் என்பது கருப்பு இன மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அமலில் இருந்து வருகிற பொது முடக்கத்தையும் கருப்பர் இன மக்கள் பொருட்படுத்தாமல் வீதிகளுக்கு வந்து போராடுகிறார்கள். மினியாபொலிஸ் நகரில் தொடங்கிய போராட்டம், இப்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. போலீஸ் வாகனங்கள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்படுகின்றன. கொள்ளை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

நேற்று அதிகாலை வரை நீடித்த போராட்டங்களையும், அவற்றில் வெடித்த வன்முறையையும் தொடர்ந்து 16 மாகாணங்களில் உள்ள 25 நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நகரங்களில் மினியாபொலிஸ், செயின்ட் பால், பேவர்லி ஹில்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், டென்வர், மியாமி, அட்லாண்டா, சிகாகோ, லூயிஸ்வில்லே, ரோகெஸ்டர், சின்சினாட்டி, கிளவ்லாந்து, கொலம்பஸ், டேடன், டொலிடோ, சியாட்டில், நேஷ்வில்லே, சால்ட்லேக் சிட்டி, கொலம்பியா, சார்லஸ்டன், பிட்ஸ்பர்க், பிலடெல்பியா உள்ளிட்டவை அடங்கும்.

மினியாபொலிசில் போலீஸ் அதிகாரிகள் மீது கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் போராட்டக்காரர்கள் வீசியதாக கூறப்படுகிறது.

இந்தியானாபொலிசில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 3 பேர் சுடப்பட்டனர். ஒருவர் உயிரிழந்தார். ஒரு போலீஸ் அதிகாரியும் படுகாயம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புளோரிடாவில் டாம்பாவில் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கினர். பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. போலீசார் மீது கல்வீச்சு நடந்தது. இங்கு போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். பல நகரங்களில் தேசிய போலீஸ் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த போராட்டங்கள் தொடர்பாக 16 நகரங்களில் 1400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 500-க்கும் மேற்பட்டோர் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேஷ்வில்லே நகரில் கோர்ட்டு கட்டிடத்துக்கும், நகர மண்டபத்துக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அங்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்ட்டுள்ளது.

நியுயார்க் நகரில் போராட்டம் தொடர்வததால், இதை பொறுத்துக்கொள்ள முடியாது என அந்த நகர மேயர் பில் டி பிளேசியோ எச்சரித்துள்ளார்.

இந்த போராட்டங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்க உள்ள ஜோ பிடன் கருத்து தெரிவிக்கையில், “இது போன்ற மிருகத்தனத்தை (ஜார்ஜ் பிளாய்ட் கொலை) எதிர்ப்பது சரியானது மற்றும் தேவையானது” என கூறி உள்ளார்.

இதையொட்டி அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இது முற்றிலும் அமெரிக்காவின் பதில். கடந்த சில நாட்களாக நாம் அநீதிக்கு ஆத்திரம் அடைகிற நாடு என்பதை அப்பட்டமாக காட்டியுள்ளோம்” என கூறி உள்ளார்.

Next Story