கொரோனாவால் வருமானம் பாதிப்பு: பணம் அனுப்புவதில் ரூ.8.17 லட்சம் கோடி சரிவு - ஐ.நா. பொதுச்செயலாளர் தகவல்


கொரோனாவால் வருமானம் பாதிப்பு: பணம் அனுப்புவதில் ரூ.8.17 லட்சம் கோடி சரிவு - ஐ.நா. பொதுச்செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 4 Jun 2020 12:02 AM GMT (Updated: 4 Jun 2020 12:02 AM GMT)

கொரோனாவால் வருமானம் பாதித்துள்ளது. இதனால் பணம் அனுப்பவுதில் ரூ.8.17 லட்சம் கோடி அளவுக்கு சரிவு ஏற்படும் என்று ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கூறி உள்ளார்.

நியுயார்க், 

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வருகிறது. ஏறத்தாழ 200 உலக நாடுகளில் இந்த தொற்று 63 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம்பற்றிய கொள்கை சுருக்கத்தை ஐ.நா. சபை வெளியிட்டது. அதையொட்டிய வீடியோ செய்தியில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மக்களின் இயக்கம் குறித்து புதியதொரு மன நிலையை நாடுகள் வளர்த்துக்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுநோயானது, மனித குலத்தின் இயக்கத்தை மீண்டும் கற்பனை செய்வதற்கான ஒரு வாய்ப்பு ஆகும்.

இதற்கு 4 புரிதல்கள் வழிகாட்ட வேண்டும்.

முதலில் கொரோனா வைரஸ் தொற்றை அடக்குவதற்கு பொது சுகாதாரம், சமூக பொருளாதாரம் அனைத்தும் அடங்கிய பதிலளிப்பு அவசியம். இது பொருளாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கும், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும் உதவும்.

இரண்டாவதாக கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொள்வதில் மனிதர்களின் கவுரவம் நிலை நாட்டப்பட வேண்டும்.

மனித உரிமைகள் மற்றும் சர்வதேச அகதிகள் பாதுகாப்பு கொள்கைகளை மதிக்க வேண்டும். பயண கட்டுப்பாடுகள் மற்றும் எல்லை கட்டுப்பாடுகளை எவ்வாறு செயல்படுத்தலாம் ன்பதை சில நாடுகள் செய்ததில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக எல்லோரும் பாதுகாப்பாக இருக்கும் வரையில் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. நோய் அறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும். நான்காவதாக நகர்ந்து செல்கிற மக்கள் தீர்வின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். நாம் தேவையற்ற தடைகளை நீக்குவோம். இடம் பெயர்ந்தோருக்கான பாதைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், போக்குவரத்து செலவுகளை குறைப்பதற்குமான மாதிரிகளை ஆராய வேண்டும்.

தங்களது சொந்த சமூக, பொருளாதார, சுகாதார சவால்களுக்கு மத்தியிலும் எல்லைகளையும், இதயங்களையும் அகதிகளுக்காகவும், இடம் பெயர்ந்தோருக்காகவும் திறந்து விட்டுள்ள வளர்ந்து வரும் நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகின் அகதிகளை பாதுகாக்கும் பொறுப்பை சமமாக பகிர்வதையும், மனித இயக்கம் பாதுகாப்பாகவும், அனைத்தையும் உள்ளடக்கியதாகவும், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் அகதிகள் சட்டத்தை மதிக்கிறது என்பதையும் உறுதிப்படுத்த நம் அனைவருக்கும் ஒரு விருப்பமான ஆர்வம் உள்ளது.

வன்முறை அல்லது பேரழிவில் இருந்து வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம் பெயர்ந்த நபர்கள் அல்லது குடியேறியவர்கள் போன்றவர்கள் 3 விதமான நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். அவை சுகாதார நெருக் கடி, சமூக-பொருளாதார நெருக் கடி மற்றும் பாதுகாப்பு நெருக்கடி ஆகும்.

கூட்ட நெரிசலான இடங்களில்தான் மக்கள் பலரும் தனி மனித இடைவெளியினை பின்பற்றுதல் சாத்தியமில்லாதபோது, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகின்றனர். குறைவாக வளர்ந்த நாடுகளில் வாழும் ஏராளமான மக்களுக்கு இந்த தாக்கம் இன்னும் பேரழிவை ஏற்படுத்தும். கொரோனா வைரஸ் காரணமாக வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக 109 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.8.17 லட்சம் கோடி) பணம் அனுப்புவது குறையும் என்று அவர் கூறி உள்ளார்.


Next Story