அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் கொலையில் திருப்பம்: 4 போலீஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு


அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் கொலையில் திருப்பம்: 4 போலீஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு
x
தினத்தந்தி 5 Jun 2020 5:00 AM IST (Updated: 5 Jun 2020 2:36 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொலையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 4 போலீஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொலையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 4 போலீஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் போராட்டங்கள் முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவில் கருப்பு இன மக்கள் வெள்ளை இன போலீஸ் அதிகாரிகளால் கொல்லப்படுவது வழக்கமாகி உள்ளது.

இந்த நிலையில் அங்குள்ள மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கருப்பு இனத்தவர், கடந்த 25-ந் தேதி போலீசார் பிடியில் கொலை செய்யப்பட்டது, கருப்பு இன மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த படுகொலை காட்சிகள் அடங்கிய வீடியோ அங்கு வைரலாகி அதிர வைத்தது.

இந்த கொலையில் நேரடி தொடர்புடைய போலீஸ் அதிகாரி மீது மட்டும் கொலை வழக்கு முதலில் பதிவானது.

ஆனால் தொடர்புடைய 4 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து நீதி வழங்க வேண்டும் என் கருப்பு இன மக்கள் தொடர் போராட்டங்களில் குதித்தனர். சம்பவம் நடந்த மினியா பொலிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியது. பெரும் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.






 அமெரிக்காவில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் மரண சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவரது மரணம் நடந்த விதத்தை சித்தரித்து பாஸ்டன் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.




வன்முறையை அடக்க ராணுவம் அனுப்பப்படும் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த பின்னர் வன்முறை குறையத்தொடங்கியது.

இந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஜார்ஜ் பிளாய்ட் படுகொலையில் தொடர்புடைய 4 போலீஸ் அதிகாரிகள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்னசோட்டா மாகாண அட்டார்னி ஜெனரல் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்:-

* நேரடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள போலீஸ் அதிகாரி டெரக் சயூவின்மீது முதலில் சுமத்தப்பட்ட 3-ம் நிலை கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடரும். மேலும் அவர் மீது 2-ம் நிலை குற்றச்சாட்டும் சுமத்தப்படும்.

* பணிநீக்கம் செய்யப்பட்ட எஞ்சிய 3 போலீஸ் அதிகாரிகளான தாமஸ்லேன், அலெக்சாண்டர் குயெங், டூ தாவோ ஆகியோர் மீது கொலைக்கு உடந்தையாக இருந்ததாக (2-ம் நிலை குற்றத்துக்கு) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் 2-ம் நிலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 3-ம் நிலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்க முடியும்.

இந்த திருப்பத்தை ஜார்ஜ் பிளாய்டு குடும்ப வக்கீல் பெஞ்சமின் கிரும்ப் வரவேற்றுள்ளார். இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “இது நீதிக்கான பாதையில் குறிப்பிடத்தகுந்த ஒரு நடவடிக்கை. ஜார்ஜ் பிளாய்ட் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என கூறினார்.

இதனால் நாடு முழுவதும் நடந்து வருகிற கருப்பு இன மக்களின் போராட்டங்கள் முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே ஜார்ஜ் பிளாய்ட் படுகொலைக்கு பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நேற்று வெளியானது.

இதையொட்டி தலைமை மருத்துவ பரிசோதனையாளர் டாக்டர் ஆண்ட்ரூ பேக்கர் கூறுகையில், “ஜார்ஜ் பிளாய்டுக்கு மரணத்துக்கு பிந்தைய நிலையில் பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்து. அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.

ஜார்ஜ் பிளாய்டு மறைவையொட்டி, மின்னசோட்டா, டெக்சாஸ், வடக்கு கரோலினா ஆகிய மாகாணங்களில் நினைவு பிரார்த்தனை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Next Story