கொரோனா தடுப்பூசி தயாரிப்பை தொடங்கும் முன்னணி நிறுவனம்: 200 கோடி ’டோஸ்’ உற்பத்தி செய்ய இலக்கு


கொரோனா தடுப்பூசி தயாரிப்பை தொடங்கும் முன்னணி நிறுவனம்: 200 கோடி ’டோஸ்’ உற்பத்தி செய்ய இலக்கு
x
தினத்தந்தி 6 Jun 2020 5:45 AM IST (Updated: 6 Jun 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கான தடுப்பூசியை முன்னணி நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளது. அதில் 200 கோடி ’டோஸ்’ உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்ட்டுள்ளது.

கண்ணுக்குத் தெரியாது. ஆனால் அதன் வீரியமோ உலகையே கதிகலங்க வைக்கிறது. அதுதான் கொரோனா வைரஸ்.

டிசம்பர் 1-ந் தேதி சீனாவின் உகான் நகரத்தில் தனது கைவரிசையை தொடங்கிய இந்த வைரஸ் இப்போது உலகின் 200 நாடுகளில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது.

நேற்று மதிய நிலவரப்படி இந்த வைரஸ் தொற்று உலகமெங்கும் 66 லட்சத்து 42 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு ஏற்பட்டுள்ளது. 3 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிரையும் பறித்து இருக்கிறது.

இந்தப் பரவலையும், உயிரிழப்புகளையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமானால், நோய் எதிர்ப்புச்சக்தியை பெருக்க வேண்டும். அதற்கு இப்போதைய ஒரே நம்பகமான தீர்வு என்றால் அது தடுப்பூசி மட்டும்தான்.

அதனால் உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு இது தொடர்பான ஆராய்ச்சியையும், சோதனைகளையும் நடத்திக்கொண்டிருக்கின்றன. யார் முதலில் தடுப்பூசி கொண்டு வருகிறார்களோ, அவர்கள் களத்தில் முதலில் வருவதால் கோடிகளை குவிக்க முடியும்.

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் கேம்பிரிட்ஜ் நகரில், இங்கிலாந்து, சுவீடன் ஆகிய இரு நாடுகளின் கூட்டு நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் இணைந்து தடுப்பூசியை தயாரித்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் தலைவர் பாஸ்கல் சொரியட் இதுபற்றி கூறுகையில், “இப்போதே தடுப்பூசிகளை தயாரிக்க தொடங்கி விட வேண்டும். அப்போதுதான் தடுப்பூசி பயனுள்ளது என்பதை நிரூபிக்க முடியும். இந்த தடுப்பூசி பற்றிய முடிவுகள் வெளியாகும் நேரத்தில் அதைப் பயன்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்று எதிர்பார்ப்பதாக சொல்கிறார்.

இந்த நிறுவனம், 200 கோடி ‘டோஸ் தடுப்பூசி மருந்துகளை தயாரித்து வினியோகிக்க இலக்கு வைத்து களத்தில் இறங்கி இருக்கிறது.

தடுப்பூசியை இப்போதே தயாரிக்கத்தொடங்கி விட வேண்டும் என்று கருதுவதற்கு காரணம், முடிந்தளவுக்கு வேகமாக இருக்க வேண்டும் என்பதால்தான் என்கிறார் இவர்.

“நிச்சயமாக இந்த முடிவு ஆபத்தானதாக இருக்கிறது. ஆனால் இது நிதி ஆபத்துதான். தடுப்பூசி முடிவு சரியாக வேலை செய்யாவிட்டால் அனைத்தும் இழப்பாகி விடும். அதே நேரத்தில் கொரோனா தொற்று நோய் பரவி வரும் காலத்தில் லாபம் ஈட்டுவதை கவனம் செலுத்த மாட்டோம்” என்று சொல்கிறார் பாஸ்கல் சொரியட்.

தாங்கள் தயாரிக்கிற தடுப்பூசிகளில் பாதியளவை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு வினியோகிக்க இந்த நிறுவனம் முன் வந்துள்ளது.

இந்த நிறுவனம், இந்தியாவின் செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்துடன் கரம் கோர்த்து இருக்கிறது. செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம், அளவின் அடிப்படையில் உலகிலேயே அதிகளவில் தடுப்பூசிகளை தயாரிக்கிற நிறுவனம் என்பது இங்கு கோடிட்டுக்காட்டத்தக்கது. அது மட்டுமின்றி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில் கேட்ஸ் ஆதரவு அளிக்கிற 2 சுகாதார நிறுவனங்களுடன் 750 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5,625 கோடி) அளவுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

2 தொண்டு நிறுவனங்களான தொற்றுநோய்களுக்கான தயாரிப்பு கண்டுபிடிப்பு கூட்டணியும், காவி தடுப்பூசிகளின் கூட்டணியும் சேர்ந்து 30 கோடி தடுப்பூசிகளை தயாரித்து வழங்க உதவும். இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசிகள் வினியோகம் தொடங்கி விடும்.

எங்கள் தடுப்பூசி ஏஇசட்டி 1222 பயன்தரத்தக்கதா என்பது ஆகஸ்டு மாதம் தெரிந்து விடும் என்று நம்புகிறார் பாஸ்கல்.

ஆனால் தடுப்பூசி வேலை செய்யாமல் போகவும் கூடும் என்று தொற்றுநோய்களுக்கான தயாரிப்பு கண்டுபிடிப்பு கூட்டணியின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்டு ஹாட்செட் உண்மையை போட்டு உடைக்க தவறவில்லை.

அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம், இந்தியாவின் செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம், 100 கோடி ‘டோஸ் தடுப்பூசி மருந்தை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு வழங்க வகை செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 40 கோடி டோஸ் மருந்துகளை வழங்க உறுதி அளித்துள்ளது.

மேலும் பாஸ்கல் சொரியட்கூறுகையில், “உலகெங்கிலும் ஏராளமான வினியோக சங்கிலிகளை உருவாக்கி வருகிறோம். தொற்றுநோய் காலத்தில் எந்த லாபமும் இல்லாமல் உலகளாவிய அணுகலை ஆதரிப்பதற்காகவும், இதுவரை 200 கோடி டோஸ் மருந்து உற்பத்திக்கான திறனை ஏற்படுத்தி இருக்கிறோம்” என்கிறார்.

“முதலாவது தடுப்பூசி என்பது முக்கியம். அடுத்து அதை பெரிய அளவில் உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால் இது எளிய காரியம் அல்ல” என்ற யதார்த்தத்தையும் இவர் சுட்டிக்காட்டுகிறார்.

கொரோனா வைரஸ் என்பது உலகளாவிய துயரம். அது மனித குலத்துக்கு சவால் என்பதையும் ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்.

இவரது அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம், அமெரிக்காவுக்கும் 30 கோடி டோஸ்களை வினியோகிக்கவும், இங்கிலாந்துக்கு 10 கோடி டோஸ்களை வினியோகிக்கவும் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது. முதல் கட்ட வினியோகத்தை செப்டம்பரில் தொடங்கி விட முனைப்பாக உள்ளது.

இந்த தருணத்தில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கூறிய வார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. “ கொரோனாவுக்கு எதிரான ஒரு தடுப்பூசி உலகளாவிய பொது நன்மையாக பார்க்கப்பட வேண்டும். இதை மக்கள் தடுப்பூசி என்றே உலகத்தலைவர்கள் அழைப்பது அதிகரித்து வருகிறது”.

ஆம். இந்த மக்கள் தடுப்பூசி பலன் அடையத்தக்கதாக அமைந்து இந்தியாவுக்கும் வருகிறபோது, இந்திய மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட முடியும். அதற்காகத்தான் அனைவரும் காத்திருக்கிறார்கள்!


Next Story