இங்கிலாந்துக்கு பரவிய 50% கொரோனா தொற்றுக்களுக்கு காரணம் பாகிஸ்தான் -தகவல்


இங்கிலாந்துக்கு பரவிய 50% கொரோனா தொற்றுக்களுக்கு காரணம் பாகிஸ்தான் -தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2020 8:55 AM GMT (Updated: 27 Jun 2020 8:55 AM GMT)

வெளிநாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு பரவிய 50 சதவிகித கொரோனா தொற்றுக்களுக்கும் காரணம் பாகிஸ்தான்தான் என தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன்

இங்கிலாந்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 4,000 கொரோனா பாதிப்புகள் பதிவாகிறது. மேலும் அதன்  ஊரடங்குநடவடிக்கைகளை தளர்த்திய பின்னர் இந்த நோயில் புதிய உயர்வு காணப்படுகிறது. அது முழுவதும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால். 

பிரபல இங்கிலாந்து பத்திரிகையான மெயில் ஆன் லைன் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், வெளிநாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு பரவிய 50 சதவிகித கொரோனா தொற்றுக்களுக்கும் பாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்து  வந்தவர்கள் தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 4ஆம் தேதி முதல் வெளிநாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு கொரோனாவைக் கொண்டுவந்தவர்களில் பாதிபேர் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தின் பொது சுகாதாரத்துறை, அப்படி வந்தவர்கள் 30 பேர் என்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து மார்ச் 1 முதல் 190 விமானங்களில் 65,000க்கு அதிகமானவர்கள் இங்கிலாந்துக்கு வந்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் என்றும் தி டெலிகிராப் என்னும் பத்திரிகை தெரிவித்துள்ளது.

நாளொன்றிற்கு பாகிஸ்தானிலிருந்து இரண்டு விமானங்கள் இங்கிலாந்து வரும் நிலையில், சில நேரங்களில் பாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்து வந்திறங்கும் சிலர் நேரடியாக மருத்துவமனைகளுக்கே சென்று தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்படுவதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

ஜூன் 22ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து  ஹாங்காங் செல்லும் விமானம் ஒன்றில் 30 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததையடுத்து இந்த வாரம் பாகிஸ்தானிலிருந்து வரும் விமான சேவையை துபாய் நிறுத்திவிட்டது.

ஏப்ரல் மாத துவக்கத்திலிருந்து பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் விமானங்கள் இங்கிலாந்துக்கும் இங்கிலாந்திலிருந்து பாகிஸ்தானுக்கும்  பறந்தவண்னம் உள்ளன.முதலில், இரு நாடுகளில் சிக்கியிருக்கும் மற்ற நாட்டவர்களை அவரவர் நாட்டுக்கு கொண்டு சேர்ப்பதற்காக துவக்கப்பட்ட இந்த விமான சேவை, பிறகு தொடர்ச்சியாகவே செயல்படத் தொடங்கிவிட்டது.

பாகிஸ்தானில் சுமார் 200,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், சுமார் 4,000 பேர் பலியாகியுள்ளார்கள்.இப்படிப்பட்ட சூழலில், வெளிநாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு பரவிய 50 சதவிகித கொரோனா தொற்றுக்களுக்கும் காரணம் பாகிஸ்தான் தான் என தகவல் வெளியானதையடுத்து, அதிக அபாயமுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளை கடுமையான சோதனைகளுக்குள்ளாக்கவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Next Story