நேபாளத்தில் வரும் ஜூலை 22 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு


நேபாளத்தில் வரும் ஜூலை 22 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 30 Jun 2020 9:02 AM GMT (Updated: 30 Jun 2020 9:02 AM GMT)

நேபாளத்தில் வரும் ஜூலை 22ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

காத்மாண்டு,

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
 
தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது. இதேபோல், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக உலக நாடுகள் ஊரடங்கை பின்பற்றி வருகின்றன. அந்த வகையில் கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள நாடுகள் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளன. நேபாளத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை கொரோனா தொற்றால் 13,248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றிலிருந்து 3,134 பேர் குணமடைந்த நிலையில், 29 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் நேபாளத்தில் ஜூலை 22ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று நடத்தப்பட்ட அமைச்சர்கள் சந்திப்பைத் தொடர்ந்து தற்போது நிலவும் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 90% வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள். பெரும்பாலும் அவர்கள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்களுக்குக் கொரோனா அறிகுறிகள் இல்லை. மேலும், நேபாளத்தில் உள்ள 77 மாவட்டங்களில் 75 மாவட்டங்களில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது என்றும் நேபாள அரசு தெரிவித்துள்ளது.

Next Story