கொரோனா வைரசிடமிருந்து உயிர்களை காக்க 5 மந்திரங்கள் - உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் சொல்கிறார்


கொரோனா வைரசிடமிருந்து உயிர்களை காக்க 5 மந்திரங்கள் - உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் சொல்கிறார்
x
தினத்தந்தி 1 July 2020 5:15 AM IST (Updated: 1 July 2020 1:52 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரசிடமிருந்து உயிர்களை காக்க 5 முக்கிய வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.

ஜெனீவா,

எந்தவொரு தொடக்கமும் முடிவுக்கு வந்தே தீரும். இது கெரோனா வைரஸ் என்ற ஆட்கொல்லி வைரசுக்கும் பொருந்தும். இது எப்போது முடிவுக்கு வரும் என்பது தான் உலமெங்கும் உள்ள சுமார் 780 கோடி மக்களின் ஒரே கேள்வியாக அமைந்திருக்கிறது. இந்த நூற்றாண்டில் இந்த கொடிய வைரசைப்போன்றதொரு சேதத்தை கணக்கிட முடியாத அளவுக்கு எந்தவொரு வைரசும் ஏற்படுத்தியதில்லை என்றுதான் சொல்ல வேண்டியதிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி முதன்முதலாக வெளிப்பட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் பதிவு தெரிவிக்கிறது. இந்த 6 மாத காலத்தில் இந்த கண்ணுக்கு தெரியாத வைரஸ்,1 கோடியே 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மனிதர்களின் உடல்களுக்குள் புகுந்து விட்டது. 5 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை ஏற்கனவே பறித்துக்கொண்டு விட்டது. இன்னும் என்ன தீராப்பசியோ, இந்த கொலைகார வைரசுக்கு? அதனால்தான் இன்னும் அது தன் வெறியாட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த வைரஸ் பரவல் நிலவரம் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், நிருபர்களிடம் பேசுகையில் கூறிய கருத்துக்கள் இவை- இந்த வைரஸ் முடிவுக்கு வந்துவிட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். நாம் அனைவரும் நமது இயல்பான வாழ்க்கையை தொடர வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் கடினமான உண்மை, வேறாக இருக்கிறது.

நாம் அந்த வைரசை முடிவுக்கு கொண்டு வரும் நிலைக்கு அருகில் கூட இல்லை என்பதே உண்மை. பல நாடுகள் சில முன்னேற்றங்களை கண்டுள்ளன. ஆனால் உலகளவில் இந்த தொற்றுநோய் உண்மையிலேயே வேகம் அடைகிறது. நாம் அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறோம். ஒரு நீண்ட காலத்துக்கு நாம் எல்லாரும் இதில் இருந்துதான் ஆக வேண்டியதிருக்கிறது.

இந்த தொற்று நோய்க்கு எதிராக அறிவியல், ஒற்றுமை, தீர்வுகள் என்ற வகையில் உலக சுகாதார நிறுவனம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இனி வரும் மாதங்களில் அனைத்து நாடுகளும் எதிர்கொள்ளும் முக்கிய கேள்வி, இந்த வைரசுடன் எப்படி வாழ்வது என்பதுதான். இதுவே புதிய இயல்பாகி இருக்கிறது.

-இப்படி சொல்லிக்கொண்டே போகிறார்.

சரி, உயிர்களை காப்பாற்றிக்கொள்ள என்னதான் வழி?

அதற்கு டெட்ரோஸ் அதானோமிடம் இருந்து மந்திரங்கள் போல வரும் 5 முக்கிய வழிகாட்டுதல்கள் இவை:-

1. தனி மனித இடைவெளியை பின்பற்றவும், சுகாதார ரீதியில் தங்களை தற்காத்துக்கொள்ளவும் மக்களை மேம்படுத்த வேண்டும்; அத்துடன் கொரோனா வைரஸ் தொடர்பான நம்பகமான தகவல்களை மட்டுமே மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

2. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கும், பாதிப்புக்குள்ளானோரின் தொடர்வு தடம் அறிவதற்கும், அவர்களை தனிமைப்படுத்துவதை உறுதி செய்வதற்கும் அரசுகள் தொடர்ந்து பணிபுரிய வேண்டும்.

3. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளானவர்களை சீக்கிரமாக அடையாளம் காண்பதற்கு அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். மருத்துவ சிகிச்சை கவனிப்புக்கு கவனம் செலுத்த வேண்டும்.

4. முதியவர்கள், நீண்டகால நோய் பராமரிப்பில் வாழ்கிறவர்கள் என கொரோனா தொற்று பரவக்கூடிய கூடுதலான ஆபத்தில் உள்ளவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

5. புதிய கொரோனா வைரஸ் பற்றி இன்னும் எவ்வளவோ கற்றுக்கொள்ள வேண்டிய நிலை இருப்பதால், அது தொடர்பான ஆராய்ச்சிகளை துரிதப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதை செய்ய வேண்டும்.

இப்படி உயிர்களை கொரோனாவிடம் இருந்து காப்பாற்றுவதற்கு வழிகாட்டுகிறார் டாக்டர் டெட்ரோஸ் அதானோம்.

இதற்கு மத்தியில் கொரோன வைரஸ் தொற்றின் அடுத்த கட்டத்துக்கான முன்னேற்றம் குறித்து மதிப்பிடுவதற்கு உலக சுகாதார நிறுவனம் இந்த வாரம் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இது தவிர்த்து, சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் தனது வல்லுனர் குழுவை அனுப்பி வைக்கிறது.

கொரோனாவுக்கு எதிரான போரில் அரசுகள் என்னதான் செய்வது? இதுபற்றி டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், “இதில் அரசுகளின் தலைமைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நாங்கள் மீண்டும் மீண்டும் சொன்னதுபோல, கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கும், உயிர்களைக் காப்பதற்கும், கொரோனா வைரசால் ஏற்படும் சமூக, பொருளாதார விளைவுகளின் தாக்கத்தை குறைப்பதற்கும் ஒரு விரிவான உத்தியை செயல்படுத்துவதற்கு தேசிய அளவில் ஒற்றுமையும், உலகளாவிய ஒற்றுமையும் அவசியம்” என்கிறார்.

கொரோனா வைரசை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழி நம் கையில்தான் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அவசியமற்று வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்த்து, வெளியே வந்தால் முககவசத்துடன் வந்து, தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து, கைச்சுத்தம் கடைப்பிடிப்பதை அனைவரும் பின்பற்றத்தொடங்கினால், கொரோனா வைரசை முடிவுக்கு கொண்டு வரும் நாட்கள் தொலைவில் இல்லை.

Next Story